IND vs SA 1st Test : தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி... முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு... தினேஷ் கார்த்திக் வருத்தம்!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை அதிகமாக மிஸ் செய்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது. ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.
அதன்படி சென்சுரியனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இதில் 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. இதில், அந்த அணி 100 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அதேபோல், சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றனர்.
ஷமியை மிஸ் செய்யும் இந்திய அணி:
இந்த போட்டியை பொறுத்தவரை இந்திய அணி தரப்பில் ஆல்ரவுண்டர் ஜடேஜா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை இந்திய அணி மிஸ் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை அதிகமாக மிஸ் செய்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், “சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது ஷமியை அதிகமாக மிஸ் செய்கிறது. பந்து வீச்சு படைக்கு ஒரு தலைவனாக முகமது ஷமி செயல்படுவார். பும்ராவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். இந்த பிட்ச் பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசும் பவுலர்களுக்கு சாதகமானது என்பதை போல் தெரிகிறது.
முகமது ஷமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார். இந்திய அணி அவரை அதிகமாக மிஸ் செய்கிறது என்பது உறுதி. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.
இன்னொரு பக்கம் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் 31 ஓவர்கள் வீசி 111 ரன்களை தான் விட்டுக் கொடுத்துள்ளனர். சிராஜும் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவரால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீச முடிந்துள்ளது.
ஒவ்வொரு பந்தை வீசும் போது சிராஜ் அல்லது பும்ரா ஆகியோர் விக்கெட்டுக்கு அருகில் சென்று வருகின்றனர். அதுபோன்ற உணர்வை களத்தில் அளிக்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பதை போல் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தால் ஓய்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது.