CSK : சிஎஸ்கே அணியின் புதிய பவுலிங் கோச் ஆன முன்னணி வீரர் யார் தெரியுமா மக்களே?
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ நியமிக்கப்பட்டார்.
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடர் 2008-ஆம் ஆண்டு அறிமுகமானது. அப்போது முதல் பிராவோ விளையாடி வந்தார்.
2008-ஆம் ஆண்டு முதல் 2010 வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலும், 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் பிராவோ விளையாடினார். பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை அவர் சிஎஸ்கேவில் நீடித்தார்.
இந்நிலையில், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் புதிய பயணத்தை தொடங்க விரும்புகிறேன். நான் விளையாடியது போதும் என்று உணர்கிறேன். நான் பந்துவீச்சாளர்களுடன் பணிபுரிவதை விரும்புகிறேன். வீரரானது முதல் தற்போது கோச் ஆவது வரை நான் எதுவும் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நான் விளையாடிக் கொண்டிருந்தபோது அனைத்து பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து பழகியிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் நான்தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், நான் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிராவோ தெரிவித்தார்.
சிஎஸ்கே சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், "ஐபிஎல் கிரிக்கெட்டில் பிராவோ சிறப்பான வரலாற்றை வைத்திருக்கிறார். சிஎஸ்கே குடும்பத்தில் அவர் ஒரு முக்கியமான உறுப்பினர். 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் எங்களுடன் பயணித்து இருக்கிறார். அவருடன் மீண்டும் வேறு வகையில் இணைந்து பயணிப்பதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கிறோம்.
பிராவோவின் அனுபவம் நிச்சயம் எங்களுக்கு கைகொடுக்கும். எங்களது பந்துவீச்சு குழு பிராவோவின் வழிகாட்டுதலில் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் விஸ்வநாதன்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பிராவோ தான் அதிக விக்கெட்டுகளை (183) கைப்பற்றியுள்ளார். இந்தச் சாதனையை அவர் 161 ஆட்டங்களில் விளையாடி செய்துள்ளார்.
இவர் வெறும் பந்துவீச்சாளர் மட்டுமல்ல, ஆல்-ரவுண்டரும் ஆவார். அவர் 1,560 ரன்களை விளாசியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 130. சிஎஸ்கே அணிக்காக பல வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
2013, 2015 ஆகிய ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக அவர் பர்ப்பிள் கேப் வென்றிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக பிராவோ சிஎஸ்கே அணிக்காக மட்டும் 144 ஆட்டங்களில் விளையாடி 168 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், 1556 ரன்களை அவர் விளாசியுள்ளார்.