Indian Cricket Team: 'இந்திய அணி கையிலெடுக்க மறுக்கும் பேராயுதம்' இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கே..?
’பொதுவாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆபத்தானவர்களே. அவர்களால் எல்லா அணியின் பேட்ஸ்மேன்களையுமே திணறடிக்க முடியும்’
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடர் நவம்பர் 17 முதல் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரவிசாஸ்திரிக்கு பிறகு பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கும் ராகுல் ட்ராவிட்டுக்கு இதுதான் முதல் தொடர். அதேமாதிரி, விராட் கோலிக்கு பிறகு கேப்டன் பதவியை ஏற்கும் ரோஹித்திற்கும் இது முதல் தொடர்.
இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் நிறைய வரவேற்கதக்க அம்சங்கள் இருக்கிறது. ருத்துராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் மாதிரியான ஐ.பி.எல் இல் சாதித்த வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிடாத சஹால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார். அஷ்வினுக்கு உலகக்கோப்பையோடு விட்டுவிடாமல் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவை.
ஆனால், இந்த அணித்தேர்வில் ஒரு முக்கிய இடம் நிரப்பப்படாமலேயே இருக்கிறது. அதாவது, அறிவிக்கப்பட்டிருக்கும் 16 பேர் கொண்ட அணியில் ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கூட இல்லை.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களான ஷாகீன் ஷா அஃப்ரிடி, ட்ரெண்ட் போல்ட் போன்றோருக்கு எதிராக கடுமையாக திணறியிருந்தனர். இந்த பௌலர்களுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அனுபவம் வாய்ந்த ரோஹித், ராகுல், கோலியால் கூட ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்திய வீரர்கள் என்றில்லை, பொதுவாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆபத்தானவர்களே. எல்லா அணியின் பேட்ஸ்மேன்களையே அவர்களால் திணறடிக்க செய்ய முடியும். இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவர் தி விக்கெட்டில் வந்து வீசும் போது வலக்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இயல்பிலேயே கிடைக்கும் அவே ஆங்கிளும், கொஞ்சம் ஸ்விங் இருந்தால் கூட கணிக்க முடியாத வகையில் பந்தை பேட்ஸ்மேனின் உடம்புக்குள் திருப்பும் திறனும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களின் பெரும்பலம்.
உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் எப்போதுமே இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றனர். 2019 ஓடிஐ உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்கே எடுத்திருந்தார். 2015 உலகக்கோப்பையில் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட் என இரண்டு இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் 22 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களாக இருந்தனர். 2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருந்தார்.
டி20 உலகக்கோப்பை என்று எடுத்துக் கொண்டால் கூட, 2007 இல் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற போது இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது ஆர்.பி.சிங்கும் இர்ஃபான் பதானுமே. இருவருமே இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்.
உலகக்கோப்பைகளை வெல்வதில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு என்ன என்பதை இதன்மூலம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், சமீபமாக நடந்து முடிந்த உலகக்கோப்பைகளில் இந்திய அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருக்கவே இல்லை. 2022 நவம்பரில் டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 இல் ஓடிஐ உலகக்கோப்பைகளில் இந்திய அணி ஆடவிருக்கிறது. அதற்கு முன்பாக நல்ல இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டிய தேவை இந்திய அணிக்கு இருந்தது.
ஆனால், இந்த நியுசிலாந்து தொடருக்கான அணியிலேயே ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கூட இல்லை. இந்திய அணிக்கு தேர்வு செய்யும் வகையில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவிலேயே இல்லையா?
நிச்சயமாக அப்படி சொல்ல முடியாது. தமிழக வீரரான நடராஜனே இடக்கை வேகப்பந்து வீச்சாளர்தான். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரே தொடரில் இந்திய அணிக்கு மூன்று ஃபார்மட்டிலும் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ஆனார். அதன்பிறகு இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக ஆடினார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் உறுதியாக இவருக்கு இடமுண்டு என்ற நிலையே இருந்தது. ஆனால், இடையில் நடராஜன் காயமடைந்து விட சில காலம் ஓய்விலிருந்தார். ஓய்வை முடித்துவிட்டு அவர் நேரடியாக உலகக்கோப்பையில் களமிறங்குவது சரியாக இருக்காது என்பதால் அவர் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
ஆனால், இப்போது நடராஜன் முழு உடல் தகுதியோடு இருக்கிறார். சையத் முஷ்தாக் அலி தொடரில் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. நடராஜனின் சமீபத்திய பெர்ஃபார்மென்ஸ்கள் சுமாராக இருப்பதாக நினைத்திருந்தால் சேத்தன் சக்காரியா, அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
அடுத்தடுத்து வரவிருக்கும் உலகக்கோப்பை தொடர்களை மனதில் வைத்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களை இப்போதிருந்தே தயார்படுத்த தொடங்க வேண்டும். ஆனால், இந்திய தேர்வுக்குழு முதல் தொடரிலேயே சறுக்கியிருக்கிறது.