அன்று டிராவிட் கேப்டன்.. இன்று பயிற்சியாளர்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த Nostalgia சம்பவம் !
கான்பூர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய அணி 6,7மற்றும் 8ஆவது விக்கெட்டிற்கு தலா 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் ரன்களை சேர்த்து அசத்தியது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. நான்காவது நாளான இன்று இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும், விக்கெட் கீப்பர் சாஹா 61* ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி வெற்றி பெற 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய அணி 6,7மற்றும் 8ஆவது விக்கெட்டிற்கு தலா 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் ரன்களை சேர்த்து அசத்தியது. இதற்கும் 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்ன?
2007 ஓவல் போட்டி:
2007ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 3ஆவது இங்கிலாந்து-இந்தியா அணிகளிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் களமிறங்கியது. அப்போது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 664 ரன்களை அடித்தது. அந்த இன்னிங்ஸில் இந்திய அணி 6,7 மற்றும் 8 ஆவது விக்கெட்டிற்கு தலா 50 ரன்களுக்கு மேல் எடுத்தது. அந்தப் போட்டியில் அனில் கும்ப்ளே தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில்
6ஆவது விக்கெட்டிற்கு- சச்சின்-தோனி ஜோடி- 63 ரன்கள் எடுத்தது.
7ஆவது விக்கெட்டிற்கு- தோனி-கும்ப்ளே ஜோடி-91 ரன்கள் சேர்த்தது.
8ஆவது விக்கெட்டிற்கு- கும்ப்ளே-ஜாகீர்கான் ஜோடி- 62 ரன்கள் சேர்த்தது.
2021 கான்பூர் டெஸ்ட்:
தற்போது கான்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் இருந்து வருகிறார். இது பயிற்சியாளராக அவருடைய முதல் டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில் 2007ல் அவருடைய கேப்டன்ஷிப்பில் நடந்தது போல் 6,7,8 விக்கெட்டிற்கு தலா 50 ரன்களை இந்திய அணி சேர்த்துள்ளது.
கான்பூர் போட்டியில்
6ஆவது விக்கெட்டிற்கு- ஸ்ரேயாஸ் ஐயர்-அஸ்வின் ஜோடி- 52 ரன்கள் எடுத்தது.
7ஆவது விக்கெட்டிற்கு- ஸ்ரேயாஸ் ஐயர்-சாஹா ஜோடி-64 ரன்கள் சேர்த்தது.
8ஆவது விக்கெட்டிற்கு- சாஹா-அக்சர் ஜோடி- 67* ரன்கள் சேர்த்தது.
2007ல் டிராவிட் தலைமையிலான அணியும் 2021ஆம் ஆண்டு டிராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய அணியும் ஒரே சாதனையை நிகழ்த்தியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்த ஒற்றுமை நடந்துள்ளது மேலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: "எங்களை வீழ்த்திவிடுவோம் என்ற முழு நம்பிக்கையில் இந்தியா உள்ளது" - நியூசிலாந்து பேட்டிங் பயிற்சியாளர்