Ashwin Records: சாதனைகளை சட்டைப்பையில் அள்ளிப்போடும் அஸ்வின்..! இப்படியெல்லாமா சாதனை செய்வது..?
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 31வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் அசத்தியுள்ளார்.
![Ashwin Records: சாதனைகளை சட்டைப்பையில் அள்ளிப்போடும் அஸ்வின்..! இப்படியெல்லாமா சாதனை செய்வது..? indian bowler ravichandran ashwins new world records in test match against BGT nagpur Ashwin Records: சாதனைகளை சட்டைப்பையில் அள்ளிப்போடும் அஸ்வின்..! இப்படியெல்லாமா சாதனை செய்வது..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/4b1721e014f08213015f53481ce72aba1676118454273428_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அஸ்வினின் சாதனை பயணம்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினாலே சாதனை தான் எனும் வகையில் அவரது செயல்பாடு உள்ளது. அந்த வகையில், அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியிலும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அஸ்வின் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதோடு, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது.
31வது 5-விக்கெட்:
இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம், தனது 31வது 5 விக்கெட்டை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் ஒரு போட்டியில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த பட்டியலில் அஸ்வின் 7வது இடத்தில் இருக்க, 67 முறை 5 விக்கெட்ஸ் எடுத்து இலங்கையின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இதனிடையே, இந்தியாவில் அதிக முறை அதாவது 25 முறை 5 விக்கெட்ஸ் எடுத்த வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை, அஸ்வின் சமன் செய்துள்ளார். 28 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனில் கும்ப்ளே செய்த சாதனையை, வெறும் 11 ஆண்டுகளிலேயே அஸ்வின் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடது கை பேட்ஸ்மேன்களின் பயம்:
டெஸ்ட் வரலாற்றில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறார் இந்திய வீரர் அஸ்வின். இதுவரை 166 இன்னிங்ஸில் பந்துவீசியுள்ள அஸ்வின், 230 இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த ஆண்டர்சன் 314 இன்னிங்ஸில் விளையாடி 209 விக்கெட்டுகளுடனும், பிராட் 276 இன்னிங்ஸில் விளையாடி 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
முதல் இந்தியர்:
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டை கைப்பற்றியபோது அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். மேலும், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்தியர் மற்றும் 3வது சர்வதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
2வது இடத்தில் அஸ்வின்:
இரண்டாவது இன்னிங்ஸில் நான்காவது விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்க, அஸ்வின் 96 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மற்றும் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர், தலா 95 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)