Rohit Sharma: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் - ”இந்த முறை மிஸ்ஸே ஆகாது” - ரோகித் சர்மா
Rohit Sharma: தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை அதாவது டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடடிலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி 20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என எதிலும் இவர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை அதாவது டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் விராட் கோலி தென்னாப்பிரிக்காவில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பினார். இவருடன் இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். இதுமட்டும் இல்லாமல் இந்திய அணியில் கே.எஸ். பரத் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஏற்கனவே முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “மிக முக்கியமான டெஸ்ட் தொடர். நாங்கள் இங்கு ஒரு தொடரை வென்றதில்லை. இது எங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. நாங்கள் கடந்த இரண்டு முறையும் தொடரை வெல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் நூலிழையில் தவறவிட்டோம். ஆனால் இறுதிவரை போராடியது ஒரு அணியாக எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.
தென்னாப்பிரிக்காவில் பேட்ஸ்மேனுக்கு எப்போதும் மிகவும் சவாலாகவே இருக்கும். இந்த சவாலை ஒரு பேட்ஸ்மேனாக நான் எதிர்நோக்க காத்திருக்கின்றேன். இந்திய அணியில் தற்போது பும்ரா மற்றும் சிராஜ் என்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் வழக்கமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இவர்களுக்கு அடுத்து அனுபவம் வாய்ந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் இந்திய அணிக்கு பலமான பந்து வீச்சு வரிசை இருந்தாலும், அணியில் முகமது ஷமி இல்லாதது அணிக்கு மிகவும் பின்னடைவுதான்.
நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் மட்டும் இல்லாமல் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடியுள்ளார். உலகக் கோப்பையில் அணியின் வெற்றிக்காக அவரின் கடுமையான உழைப்பு அணிக்கு கைகொடுத்தது. மேலும் மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் அணிக்கு மிகவும் தேவையானதாக உள்ளது. நல்ல அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அவருக்கு சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்யத் தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது தொடரும் என நினைக்கின்றேன்” என கூறினார்.
இதுமட்டும் இல்லாமல், உலகக் கோப்பை தோல்வி குறித்தும் இந்த பேட்டியில் ரோகித் சர்மா கூறியுள்ளார். அதில், “ அணியாக நாங்கள் இறுதிப் போட்டிவரை சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதிப் போட்டியில் நாங்கள் சில இடங்களில் சொதப்பிவிட்டோம். அந்த தோல்வியில் இருந்து நாங்கள் மீண்டுவர இந்திய ரசிகர்கள் எங்களுக்கு உதவினர். தனிப்பட்ட முறையில் ஒரு பேட்ஸ்மேனாக நான் செய்தது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது” எனக் கூறினார்.