(Source: ECI/ABP News/ABP Majha)
"இந்தியாவை 350 ரன்களுக்குள் சுருட்டுவோம்" - முதல் நாளில் 3 விக்கெட் எடுத்த நிகிடி சூளுரை!
இந்த ஆடுகளத்தில் இன்னும் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அது விரைவாக நடக்கலாம். இந்திய அணியை 350 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடிந்தால் போட்டியை மாற்ற முடியும்.அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
செஞ்சுரியனில் நடக்கும் இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சுக்கு முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ராவும் இணைத்துக் கொள்ளப்பட, ஆல்-ரவுண்டராக ஷா்துல் தாக்குா், சுழற்பந்து வீச்சுக்கு அஸ்வின் சோ்க்கப்பட்டுள்ளனா். தென் ஆப்பிரிக்க அணியில் மாா்கோ யான்சென் முதல் முறையாக சா்வதேச டெஸ்டில் களம் காண, வியான் முல்டா் ஆல-ரவுண்டராக தோ்வாகினாா். சுழற்பந்துவீச்சுக்கு கேசவ் மகராஜ் சோ்க்கப்பட்டாா். ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால் கூட்டணி தொடங்க, இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சோ்க்க, மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகா்வால் 89 பந்துகளில் அரைசதம் கடந்தாா். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை, 41-ஆவது ஓவரில் பிரித்தாா் கிடி. 9 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சோ்த்த அகா்வால், எல்பிடபிள்யூ ஆனாா்.
அடுத்து வந்த புஜாரா, அதே ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பீட்டா்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து கேப்டன் கோலி களம் காண, ராகுல் 127 பந்துகளில் அரைசதம் எட்டினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு அவரும், கோலியும் இணைந்து 82 ரன்கள் சோ்த்தனா். இந்நிலையில், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்திருந்த கோலி, 69-ஓவரில் கிடியின் பௌலிங்கில் ஸ்லிப்பில் நின்ற வியான் முல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த ரஹானே நிதானமாக ஆடி ராகுலுக்கு துணை நிற்க, அவா் 218 பந்துகளில் தனது 7-ஆவது டெஸ்ட் சதத்தை எட்டினாா். ஆட்டநேர முடிவில் இந்தியா 272 ரன்கள் அடித்திருக்க, ராகுல் 122, ரஹானே 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தென் ஆப்பிரிக்க தரப்பில் கிடி 3 விக்கெட் எடுத்துள்ளாா். நிதானமாக ஆடி வரும் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் 500 ரன்களுக்கு மேல் எதிர்பார்த்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்ததும் அன்றைய நாளில் வீழ்ந்த 3 விக்கெடுகளுக்கும் சொந்தக்காரரான லுங்கி நிகிடி செய்தியாளர்களிடம் பேசினார், "டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு செஷனில் நீங்கள் வெற்றி பெறலாம். தோல்வியும் அடையலாம். ஒட்டு மொத்தமாக இது கிரிக்கெட்டின் நல்ல நாளாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் இன்னும் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அது விரைவாக நடக்கலாம். இந்திய அணியை 350 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடிந்தால் போட்டியை மாற்ற முடியும்.அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த ரன்னுக்குள் இந்தியாவை ஆல்அவுட் செய்துவிட்டால் எங்களுக்கு நன்றாக இருக்கும். ஆடுகளம் நாங்கள் நினைத்தை விட குறைவாகவே சாதகமாக இருந்தது. இந்திய வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன். அது நடக்காத போது நீங்கள் வெளிப்படையாக உங்கள் திட்டங்களை மாற்றி வேறு விதமாக முயற்சிக்க வேண்டும்.", என்று கூறினார்.