Bangalore Weather Report: நியூசிலாந்து Vs இந்தியா, பெங்களூரு டெஸ்ட் தோல்வியை தடுக்குமா மழை? இன்றைய வானிலை நிலவரம்
Bangalore Weather Report: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்ய, இந்திய அணிக்கு மழை உதவுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Bangalore Weather Report: இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற, 107 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
முன்கூட்டியே முடிவுக்கு வந்த நான்காவது நாள் ஆட்டம்:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெற்று வரும் 1வது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாள் மோசமான வெளிச்சம் மற்றும் கனமழை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. 107 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கிய நிலையில், வெறும் 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் நாள் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், போட்டியின் கடைசி நாளான இன்று, நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற வெறும் 107 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதேநேரம், இந்திய அணி வெற்றி பெற 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் தான், இன்றைய போட்டியின் முடிவில் வானிலை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை அறிக்கை சொல்வது என்ன?
வானிலை முன்னறிவிப்பு , இன்று பெங்களூருவில் மழை பெய்வதற்கு 80 சதவிகித வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது, இது போட்டியின் முடிவைப் பாதிக்கலாம். அதன்படி, 5ஆம் நாள் ஆட்டத்தில் மழை தொடர்ந்து இடையூறு விளைவித்தால், போட்டி டிராவில் முடிவடையும். இதனால் வெற்றி வாய்ப்பு மிக எளிதாக உள்ள நியூசிலாந்திற்கு ஏமாற்றமளிக்கும். இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரை, டிரா என்பது மோசமான முடிவாக இருக்காது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைக் கருத்தில் கொண்டால், இந்திய அணிக்கு டிரா என்பது ஒரு நல்ல முடிவாகவே இருக்கும்.
மழைக்கான வாய்ப்பு என்ன?
- காலை 9 மணி: 22°C (மழைக்கான வாய்ப்பு 15%), மேகமூட்டம்
- காலை 10 மணி: 24°C (மழைக்கான வாய்ப்பு 16%), மேகமூட்டம்
- காலை 11 மணி: 25°C (மழைக்கான வாய்ப்பு 19%), இடியுடன் கூடிய மழை
- நண்பகல் 12: 26°C (மழைக்கான வாய்ப்பு 52%), இடியுடன் கூடிய மழை
- மதியம் 1: 26°C (மழைக்கான வாய்ப்பு 49%), மேகமூட்டம்
- பிற்பகல் 2: 27°C (மழைக்கான வாய்ப்பு 77%), மேகமூட்டம்
- பிற்பகல் 3 மணி: 27°C (மழைக்கான வாய்ப்பு 75%), மேகமூட்டம்
- மாலை 4 மணி: 26°C (மழைக்கான வாய்ப்பு 85%), மேகமூட்டம்
நியூசிலாந்து இலங்கையிடம் 2-0 என்ற ஏமாற்றத்துடன் ஒயிட்வாஷ் தோல்வியைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கியது. இந்திய துணைக் கண்டத்தில் நியூசிலாந்து அணி ஒரு மோசமான டெஸ்ட் வரலாற்றையே கொண்டுள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. குறிப்பாக, 1988க்குப் பிறகு இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதில்லை. இந்நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெல்லும் வாய்ப்பை அந்த அணி பெற்றுள்ளது.