”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
அதிமுக தலைமைக்கு யாரும் ஆலோசனை கூற வேண்டாம். தலைமை எடுக்கும் முடிவை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக துணைப் பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் பேசியதால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், கள ஆய்வில் குற்றம் குறை கூற கூடாது என்றும் தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.
தொண்டர்களால் அதிமுக தலைமை தேர்வு செய்யும் விதிகளின்படி உருவாக்கப்பட்ட அதிமுகவில், தொண்டர்கள் எந்த ஆலோசனையையும் குறைகளையும் நிர்வாகிகளிடம் கூற கூடாது என்று நத்தம் விஸ்வநாதன் பேசியது அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் கோஷ்டியாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் மத்தியிலேயே ஒருவருக்கு ஒருவர் மல்லுக்கட்டிய நிலையில், மதுரையில் நடந்த கள ஆய்வு கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் நத்தம் விஸ்வநாதனே இதுபோன்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது