India vs Leicestershire: இங்கிலாந்து அணிக்காக களமிறங்கிய பும்ரா, புஜாரா, ரிஷப் பண்ட்..! நடந்தது என்ன..?
இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் லீசெஸ்டர்ஷையர் அணிக்காக ரிஷப்பண்ட், புஜாரா, பிரசித்கிருஷ்ணா மற்றும் பும்ரா களமிறங்கியுள்ளனர்.
கடந்தாண்டு கொரோனா காரணமாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி வரும் ஜூலை 1-ந் தேதி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் கவுண்டி அணியான லீசெஸ்டர்ஷையர் அணிக்கு எதிராக இந்தியா இன்று தனது பயிற்சி போட்டியில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியை எதிர்த்து விளையாடும் லீசெஸ்டர்ஷையர் அணிக்காக இந்திய வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா, ரிஷப்பண்ட், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித்கிருஷ்ணா ஆகிய நான்கு பேரும் களமிறங்கி உள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா, சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், விராட்கோலி, ஹனுமா விஹாரி, ஸ்ரீகர்பரத், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் களமறிங்கியுள்ளனர். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 பேரும் பயிற்சி எடுக்கும் நோக்கத்தில் இந்த போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆடும் லீசெஸ்டர்ஷையர் அணிக்காக இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
That is some welcome for a practice game. Leicester is buzzing. #TeamIndia pic.twitter.com/uI5R6mafFV
— BCCI (@BCCI) June 23, 2022
பலமிகுந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆட உள்ளதால், இந்திய அணி இதுபோன்று களமிறங்கி பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்திய அணிக்கு எதிராக களமிறங்கி பந்துவீசி வரும் பிரசித் கிருஷ்ணா ஸ்ரேயாஸ் அய்யரை ஆட்டமிழக்கச் செய்தார். பும்ரா 9 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக்கி 34 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். பிரசித்கிருஷ்ணா 10 ஓவர்கள் வீசி 2 ஓவர்கள் மெய்டனாக்கி 37 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வருகிறார்.
முன்னதாக, களமிறங்கிய இந்திய அணியை உற்சாகப்படுத்தும் விதமாக சியர்லீடர்கள் இந்திய பாரம்பரிய உடையணிந்து நடனமாடி மைதானத்திற்கு வரவேற்றனர். இந்த போட்டியில் சற்றுமுன்வரை இந்திய அணி 48.2 ஓவர்களில் 191 ரன்களுடன் ஆடி வருகிறது. ஸ்ரீகர் பரத் பொறுப்புடன் ஆடி 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்