IND vs IRE: இன்று பெஞ்சில் உட்கார வைக்கப்படுகிறாரா அர்ஷ்தீப்..? களமிறங்குகிறாரா முகேஷ்..?
அயர்லாந்து அணிக்கு எதிராக இன்று நடக்கும் 2வது டி20 போட்டியில் இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங்கிற்கு பதிலாக முகேஷ்குமார் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் கடந்த வெள்ளிக்கிழமை மோதிய முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால், 140 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - அயர்லாந்து:
இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். சொந்த மண்ணில் ஆடும் அயர்லாந்து அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணியின் பந்துவீச்சு என்பது சற்று பலவீனம் என்றே சொல்ல வேண்டும். கடந்த போட்டியில் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அயர்லாந்து அணி அடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மேற்கொண்டு 109 ரன்களை சேர்த்தது.
குறிப்பாக, இந்திய அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக கருதப்பட்ட அர்ஷ்தீப்சிங் ரன்களை வாரி வழங்கினார்.டெத் ஓவர்களில் இந்திய அணிக்கு பும்ரா போல ஒருவர் தேவை என்பதே இந்த போட்டி நமக்கு உணர்த்தியது. இந்த நிலையில், இன்று அர்ஷ்தீப்சிங்கிற்கு பதிலாக முகேஷ்குமார் களமிறக்கப்படுவாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அர்ஷ்தீப்சிங்? முகேஷ்?
ஏனென்றால் அர்ஷ்தீப்சிங்கிடம் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துதல் என்பது இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. அவர் ஒரு போட்டியில் நன்றாக வீசினால் அடுத்த போட்டியில் ரன்களை வாரி வழங்குகிறார். ஐ.பி.எல். தொடரில் இதை பல முறை நாம் பார்த்திருக்கலாம். இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியிலும் கடைசி ஓவரில் நோ பால், ஒயிட் என என ரன்களை வாரி வழங்கினார்.
அவர் மட்டுமே 4 ஓவர்களில் 1 நோபால் 3 ஒயிட் உள்பட 35 ரன்களை வாரி வழங்கினார். இந்திய அணியில் மற்ற இளம் வீரர்கள் இருக்கும்போது தனக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தாவிட்டால் அவரது இடம் கேள்விக்குறியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், இன்றைய போட்டியில் அவர் இறங்குவாரா? அல்லது முகேஷ் குமார் இறக்கப்படுவாரா? என்பது அணி நிர்வாகத்தின் முடிவில் உள்ளது.
கடந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த போட்டி முழுவதும் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்திய அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், சாம்சன், திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம்துபே ஆகியோர் உள்ளனர். சுழலில் வாஷிங்டன் சுந்தர், பிஷ்னோய் உள்ளனர். வேகத்தில் கேப்டன் பும்ரா உள்ளார். பிரசித்கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், ஆவேஷ்கான் ஆகியோரில் யார் இறக்கப்படுவார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
மேலும் படிக்க: World Cup 2023: உலகக் கோப்பையில் மீண்டும் மாற்றப்படுகிறதா போட்டி தேதிகள்..? பிசிசிஐயிடம் ஹைதராபாத் கோரிக்கை!
மேலும் படிக்க: NZ vs UAE T20: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நியூசி. அணியை முதன் முறையாக தோற்கடித்த UAE… சமனான தொடரில் கடைசி டி20 போட்டி இன்று!