IND vs AUS Final: இறுதிப்போட்டியில் களமிறங்கப்போகும் அஸ்வின்! ஏன்? ஏதற்கு? எப்படி?- ஸ்பெஷல் ரிப்போர்ட்
India vs Australia Final: இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது குறித்து, இந்திய அணியின் “திங் டேங்க்” (Think Tank) தீவிரமாக யோசித்து வருகிறதாம்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கப்போகும் இந்திய அணி குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. கடந்த 6 ஆட்டங்களாக அணியை மாற்றாமல், இதுவரை வெற்றிநடைப் போட்டு இந்திய அணியில், மாற்றம் ஒன்று செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும், நம்ம தமிழ் மண்ணின் மைந்தன், அஸ்வின் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர் டூப்பர்:
தற்போதைய நிலையில், இந்தியாவின் பந்துவீச்சும் சரி, பேட்டிங்கும் சரி, இரண்டுமே “சூப்பர் டூப்பர்” என அழைக்கும் நிலையில் உள்ளது. அணியில் உள்ள 11 பேருமே, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜொலித்து, நட்சத்திரங்களாக மின்னுகின்றனர். சரியாக விளையாடாமல் சொதப்புகிறார் என யாரையுமே குறை சொல்ல முடியாத அளவுக்கு இந்திய அணியில் அனைவரும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சூழலில், இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது குறித்து, இந்திய அணியின் “திங் டேங்க்” (Think Tank) தீவிரமாக யோசித்து வருகிறதாம். காரணம் என்னவென்றால், ஆஸ்திரேலிய அணிக்கு எப்பவுமே, அஸ்வின் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார். இன்று நேற்றல்ல, அவர் விளையாட ஆரம்பித்தது முதலே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், அதிக விக்கெட்டுகள், அதாவது 145 விக்கெட்டுகள் எடுத்த இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் கூட, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றிப் பெற்ற போது கூட, அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி, 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமல்ல, அவருடைய “கேரம் பால்” பந்துவீச்சை எதிர்கொள்வதில், வார்னர் முதல் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்ஸ்கள் திணறுவதை பலமுறை நாம் அனைவருமே பார்த்திருப்போம் .
அஸ்வின் வந்தால் யார் வெளியே போவது?
அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்தால், எந்த பந்துவீச்சாளரை தூக்குவது என்ற கேள்வி வரும் போது, கேப்டன் ரோகித்துக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் பெரும் சிக்கல் எழலாம். ஏனெனில், பும்ரா, ஷமி, சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் என 5 பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பான ஃபார்மில், அணியின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்து வருகிறார்கள். 3 வேகப்பந்துவீச்சாளர்களும் அட்டகாசமாக பந்துவீசுகின்றனர். சுழல்பந்துவீச்சில் ஜடேஜா சிறப்பாக வீசுவதுடன், சிறந்த ஆல் ரவுண்டராகவும் இருக்கிறார், எனவே, குல்தீப் மீது கேள்வி வந்தாலும், சமீபகாலத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர், 21 ஆட்டங்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி, சிறந்த பந்துவீச்சாளராக இருப்பதால், அவரை எடுப்பதும் சிக்கல். எனவே, யாரை தூக்குவது என பார்க்கும்போது, சூர்ய குமார் யாதவ் பெயர் அடிபடுகிறது.
ஏன் இவரை நீக்குவதற்கு வாய்ப்பு அதிகம்?
இந்தியாவை பொறுத்தவரை, இந்த உலகக் கோப்பையில் பேட்டிங் அபாரத்தின் உச்சத்தில் உள்ளது. ரோகித், கில், விராட், ஷ்ரேயாஸ், ராகுல் என ஐந்து பேருமே அபாரமான பார்மில் உள்ளனர். அதேபோல், ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், பெளலிங்கை விட, அவர்களது பலமாக இருப்பது, பேட்டிங்தான். எனவே, நாம் ஐந்து பெளலர்களை மட்டுமே நம்பியிராமல், கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் அதுவும் அஸ்வினாக இருந்தால், அவர் பேட்டிங்கும் பல நேரங்களில் அணிக்கு கைகொடுத்துள்ளது என்பது, அஸ்வினை தேர்வு செய்வதற்கு ஏதுவாக உள்ளது.
அதுமட்டுமின்றி, பொதுவாகவே, ஆஸ்திரேலிய அணி, இந்திய சுழல்பந்துவீச்சிற்கு எதிராக திணறும், இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில்கூட, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோரின் சுழலில் திணறிப் போய்தான், 199 ரன்களுக்கு ஆட்டமிழந்து, படுதோல்வி அடைந்தது. எனவே, அஸ்வின் அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வின் சிறந்த சாய்ஸா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிறந்த சுழல்பந்துவீச்சாளராக பெரும்பாலும் அஸ்வின் ஜொலித்திருக்கிறார். குறிப்பாக, வார்னர், கேரி, ஹெட் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக அஸ்வினின் ஆஃப் ஸ்பின்னர் இருக்கும். அதுமட்டுமல்ல, அஸ்வின் அனுபவசாலி, சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடக்கூடியவர், கிட்டத்தட்ட, ஆல்ரவுண்டர் அந்தஸ்தில் இருக்கக்கூடியவர்.
ஓரளவு சிறப்பாக ஃபீல்டிங்கும் செய்யக்கூடியவர் என்பதுதான் வரலாறு சொல்லும் தகவல். எனவே, இந்திய அணி மிகச்சிறப்பாக பேட்டிங்கில் ஜொலித்து வருவதால், கூடுதல் பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக, அஸ்வின் இடம்பெறுவது இந்திய அணிக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் உத்தேச இந்திய அணி:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல், ராகுல், அஸ்வின்/ சூர்யகுமார் யாதவ், ஜடேஜா,பும்ரா, ஷம்மி, சிராஜ், குல்தீப் யாதவ்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பயிற்சியின் போது நடைபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கூட்டங்களின் போது, கடந்த 2 நாட்களாக அலசப்பட்ட தகவல்களை வைத்து இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆனால், இறுதிப்போட்டியில் களமிறங்கப்போகும் இந்திய அணியின் இடம்பெறப்போவது யார், யார் என்பது ஞாயிற்றுக்கிழமை 1 மணியளவில் தான், அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிய வரும்.