IND vs AUS U19 Final: சீனியர்ஸ்களுக்காக பழி தீர்ப்பார்களாக ஜூனியர்ஸ்! உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா?
India vs Australia U19 World Cup Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.
ஐசிசி நடத்தும் ஒவ்வொரு போட்டியும் கிரிக்கெட் உலகில் கவனம் பெறுகின்றது எனக் கூறினால் அது மிகையாகாது. ஐசிசி நடத்தக்கூடிய ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸ், ஐசிசி டி20 உலகக்கோப்பை போலவே 19வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பையும், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி:
இதில் தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவருக்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. அதில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் வரும் ஞாயிறு அன்று அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி மோதவுள்ளது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள வில்லோவ்மோர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்தாண்டு தோல்வி:
கடந்த ஆண்டில் நடைபெற்ற இரண்டு ஐசிசி கோப்பைக்கான போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமே மோதிக்கொண்டு உள்ளன. அதில் ஆஸ்திரேலியாவே வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 444 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பழிதீர்ப்பார்களா ஜூனியர்ஸ்?
அதன்பின்னர் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமே மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களுக்கு 240 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், ஒருநாள் உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசி இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
இந்நிலையில் சீனியர்கள் சந்தித்த அடுத்தடுத்த ஐசிசி கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வெளிநாட்டு மண்ணிலும் இந்திய மண்ணிலும் வென்று சாதனை படைத்தனர் ஆஸ்திரேலியாவின் சீனியர்களுக்கு இந்திய அணியின் ஜூனியர்கள் பதிலடி கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் ஜூனியர் வீரர்கள் ஆஸ்திரேலியா அணியின் ஜூனியர் வீரர்களை வீழ்த்தி சாதனை படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை உண்டாக்குவார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனாலே இந்த போட்டி மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.