India vs Australia: மூன்று நாட்களில் முடிந்துவிட்டதே..! முகம்சுளித்த விமான பயணி.. ஏன் என்று விளக்கம் கொடுத்த அஸ்வின்!
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டி வெறும் மூன்று நாட்களில் முடிந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று பார்டர் - கவாஸ்கர் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டி வெறும் மூன்று நாட்களில் முடிந்தது. 3 ம் நாளில் ஆஸ்திரேலிய வீரர்கள் 1 விக்கெட் இழப்பிற்கு 61 என்ற கணக்கில் தொடங்கி, 113 ரன்களில் அனைத்து விக்கெட்களை இழந்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 1ம் தேதி தொடங்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 19 ம் தேதியே முடிவடைந்ததால் கிரிக்கெட் வீரர்களுக்கு பல நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதையடுத்து, ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ்நாடு திரும்பினார். அப்போது அஸ்வினுடன் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கான விடையை தனது யூட்யூப் பக்கத்தில் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அஸ்வின், ”டெல்லி டெஸ்டில், முதல் செஷனிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்று நினைத்தோம். அப்போதுதான் 150-160 ரன்கள் சேஸ் செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் முதல் செஷனில் விக்கெட்கள் நன்றாக விழ, எதிரணி அனைத்து விக்கெட்களையும் இழந்து வெற்றிபெற்றோம். அப்போது விமானத்தில் இருந்த ஒரு பயணி என்னிடம், ஏன் மூன்று நாட்களில் போட்டியை முடித்தீர்கள்? எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது என்றார்.
அவரின் கேள்விக்கு பதில் சொன்ன நான், சார்! இரண்டு விஷயம் இங்கே மாறிவிட்டது. முதலாவது கிரிக்கெட் வீரர்களின் மனநிலை. இப்போதெல்லாம் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வேகமாக விளையாட விரும்புகிறார்கள். விரைவாக ரன்களை எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் கிரிக்கெட் வீரர்கள் அதிக நேரம் எடுத்து விளையாடவில்லை.
அதனால் முன்னாடி இருந்தவர்கள் இப்படி, இப்படி இருப்பவர்கள் அப்படி என்று யாரையும் யாருடன் ஒப்பிடக்கூடாது. இரண்டாவது இந்த இரண்டு பிட்ச்களும் 3 நாளில் முடிவடையும் பிட்சுகள் அல்ல. எங்களது திறமைகளால் இந்த வெற்றிகிடைத்தது” என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டோட் , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன்
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்