Ravi Shastri: உலகக் கோப்பைக்காக சச்சின் 6 முறை காத்திருந்தார்.. டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் - ரவி சாஸ்திரி!
அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
தோல்வி அடைந்த இந்திய அணி:
நடப்பு ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து 10 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றது இந்திய அணி. இதனைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த முறை உலகக் கோப்பை இந்திய அணிக்குத்தான் என்று எண்ணி இருந்தனர்.
இச்சூழலில், கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது ஆஸ்திரேலிய அணி. இதனிடையே, இந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதனத்திலேயே கண்கலங்கினார்கள்.
பின்னர், இந்திய அணி வீரர்களை ஓய்வு அறைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் படுத்திய சம்பவம் எல்லாம் நடைபெற்றது. இதனிடையே, உள்நாட்டில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில், முதல் உலகக் கோப்பையை வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கர் 6 முறை காத்திருந்தார் என்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
டி20 கோப்பையை வெல்வோம்:
இது தொடர்பாக பேசிய அவர், “இந்தியா விரைவில் உலக கோப்பையை வெல்வதை நான் பார்ப்பேன். அது 50 ஓவர் உலகக் கோப்பையாக இருக்காது. ஏனெனில் நீங்கள் மீண்டும் அதற்கான அணியை உருவாக்க வேண்டும். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் வெற்றி பெறும் அளவுக்கு இந்தியாவிடம் சவாலான திறமைகள் இருக்கிறது.
ஏனெனில் நமது அணியில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் நிறைந்து இருக்கின்றனர். அதில் நமது அணியினர் கவனம் செலுத்த வேண்டும். மேலும் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டும் நாம் கடைசியில் வெல்ல முடியாதது இன்னும் வலியை கொடுக்கிறது. ஏனெனில் நாம் வலுவான அணியாக செயல்பட்டோம்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “குறிப்பாக பவுலர்கள் நன்றாக விளையாடியதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்ததாக நீங்கள் கருதினீர்கள். ஆனால் எதுவும் எளிதாக கிடைத்து விடாது. சச்சின் டெண்டுல்கர் தம்முடைய ஒரு உலகக் கோப்பையை வெல்வதற்கு 6 முறை காத்திருந்தார்.
அந்த வகையில், உலகக் கோப்பையை எளிதாக வெல்ல முடியாது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட நாளில் தைரியமான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். மாறாக லீக் சுற்று போன்ற முந்தைய செயல்பாடுகள் முக்கியமல்ல” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Rohit Sharma: ஜாம்பவான்களுக்கு மத்தியில் முளைத்த சரித்திரம்; மும்பை அணியின் கேப்டன்சியை துறக்கிறாரா ரோகித் சர்மா?
மேலும் படிக்க: Suresh Raina: பிறந்தநாள் கொண்டாடும் சின்ன தல..ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா..!