BCCI: அஜித் அகர்கருக்கு அடித்த ஜாக்பாட்..! ஒரேடியாக தலைமை தேர்வாளர் சம்பளத்தை உயர்த்திய பிசிசிஐ.. எவ்வளவு தெரியுமா?
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய தலைமை தேர்வாளருமான அஜித் அகர்கர் தனது இதுவரை 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளராக நேற்று பிசிசிஐயால் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி தேர்வில் இருந்து தனது புதிய பொறுப்பை தொடங்க இருக்கிறார்.
சர்ச்சைக்குள்ளான தலைமை தேர்வாளர் சம்பளம்:
குறைந்த சம்பளம் காரணமாக பல முன்னாள் இந்திய வீரர்கள் இந்த தலைமை தேர்வாளர் பதவிக்கு ஆரவம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி என்ன சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை இதில் பார்க்கலாம்
முன்னதாக, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளருக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் 'கிரிக்பஸ்' வெளியிட்ட அறிக்கையின்படி, வருகின்ற புதிய தலைமை தேர்வாளருக்கு ஆண்டுக்கு ரூ. 3 கோடி சம்பளம் வழங்கப்படும். மீதமுள்ள தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 90 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மாதம் 8,33,000 வாங்கிய தலைமை தேர்வாளர் வரும் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 25,00,000 லட்சம் சம்பளமாக பெறுவார். எஞ்சிய உறுப்பினர்களின் சம்பளம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதால் அவர்களது மாத சம்பளம் எவ்வளவு என்று தெரியவில்லை.
பதவி விலகிய சேத்தன் சர்மா:
முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா செய்தி சேனல் ஒன்றில் ஸ்டிங் ஆபரேஷன் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு பதவி விலகினார். இதனை தொடர்ந்து இடைக்கால தலைமை தேர்வாளராக சிவசுந்தர்தாஸ் பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு புதிய தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த அஜித் அகர்கர்..?
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய தலைமை தேர்வாளருமான அஜித் அகர்கர் தனது இதுவரை 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஏப்ரல் 1998 இல் அகர்கர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் அவர், 47.32 சராசரியில் 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, ஒருநாள் போட்டிகளில் 27.85 சராசரியில் 288 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அஜித் அகர்கரின் பணி என்ன..?
டெஸ்ட் மற்றும் டி20 அணியில் பல பெரிய மற்றும் முக்கியமான மாற்றங்களைச் செய்வதே புதிய தலைமை தேர்வாளராக பதவியேற்றுள்ள அஜித் அகர்கருக்கு முன் இருக்கும் முதல் மிகப்பெரிய சவாலாக இருக்கும். டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரு அணிகளிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தொடர்ந்து 2 தோல்விகளுக்குப் பிறகு, சில பெரிய வீரர்கள் டெஸ்ட் அணியை விட்டு வெளியேற வேண்டும். அதே சமயம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பையை மனதில் வைத்து டி20 அணியில் சிறந்த அணியை தயார்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.