IND W vs AUS W: வீணான ஹர்மன்பிரீத் போராட்டம்..! 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..! இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா..!
மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
தடுமாறிய இந்திய அணி:
173 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 9 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். யஷ்திகா பாட்டியா 4 ரன்கள் எடுத்து இருந்தபோது, எதிர்பாராத விதமாக ரன் - அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒருகட்டத்தில் இந்திய அணி 28 ரனகளை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது.
அசத்திய ஜெமிமா - ஹர்மன் ஜோடி:
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா மற்றும் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். விக்கெட் இழக்காமல் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். இந்த ஜோடி 69 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரோட்ரிக்ஸ் 24 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஹர்மன் பிரீத் கவுர் 52 ரன்களை சேர்த்தபோது, ரன் - அவுட் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலியா பேட்டிங்:
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஹீலி மற்றும் மூனி அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 52 ரன்களை சேர்த்தது. ஹீலி 25 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி அரைசதம் விளாசினார். பின்பு 54 ரன்கள் எடுத்து இருந்தபோது அவர் ஷிகா பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து வந்த ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 31 ரன்களை சேர்த்து தீப்தி ஷர்மா பந்துவீச்சில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் மெக் லான்னிங் 49 ரன்களை குவித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் தொடர்ந்து ஏழாவது முறையாக ஆஸ்திரேலிய அணி, மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், தென்னாப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி வரும் 26ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.