IND Vs WI Test: மேற்கிந்திய தீவுகளை சுருட்டி வாயில் போட்ட இந்தியா - இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி
IND Vs WI Test: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

IND Vs WI Test: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 140 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி அபார வெற்றி:
286 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 146 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக, அலிக் 38 ரன்களையும், ஜஸாடின் க்ரேவ்ஸ் 25 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 140 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின் மூலம், இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 10ம் தேதி தொடங்கியுள்ளது.
முதல் இன்னிங்ஸிலேயே சொதப்பிய மே.தீவுகள்.,
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், திணறிய அந்நாட்டு வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஓரளவிற்கு தாக்குப்பிடித்த, ஜஸ்டின் க்ரேவ்ஸ் அதிகபட்சமாக 32 ரன்களை சேர்த்தார். இறுதியில் வெறும் 162 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இந்திய அணி அபார பேட்டிங்
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 36 ரன்களுக்கும், சாய் சுதர்ஷன் வெறும் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதேநேரம் மறுமுனையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான, கே,எல். ராகுல் நிலைத்து நின்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக ரான் சேர்த்த கேப்டன் கில், 50 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். ராகுலும் சரியாக 100 ரன்களை சேர்த்து பெவிலியன் திரும்பினர். இவர்களை தொடர்ந்து வந்த ஜுரெல் மற்றும் ஜடேஜா நிலைத்து நின்று ஆடி, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை நையப்புடைத்தனர். இந்த கூட்டணியை பிரிக்கும் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, சதம் அடித்து அசத்தினர்.
125 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஜுரெல் ஆட்டமிழந்தார். ஜடேஜா 104 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களும் சேர்க்க, 448 ரன்கள் எடுத்து இருந்தபோது இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.




















