IND vs WI Test: அஸ்வின், ஜடேஜா சுழலில் மாயம்.. 150 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா அபாரம்..!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு, கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில் இருந்த, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி, டொமினிகாவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
மளமளவென சரிந்த விக்கெட்டுகள்:
இதையடுத்து, கேப்டன் பிராத்வெயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 31 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 12 ரன்கள் எடுத்து இருந்தபோது சந்தர்பால் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு பயம் காட்டினார். இதனால், 64.3 ஓவர்களுக்கு 150 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக அதனாசே 47 ரன்களை சேர்த்தார். ஹோல்டர் அதனாசே கூட்டணி 6வது விக்கெட்டிற்கு 41 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதோடு, தாக்கூர் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணி பேட்டிங்:
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஷ்வி ஜெய்ஷ்வால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் 23 ஓவர்கள் விளையாடிய இந்த ஜோடி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களை சேர்த்துள்ளது. ஜெய்ஷ்வால் 40 ரன்களையும், ரோகித் சர்மா 30 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இதன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணியை காட்டிலும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் பின்தங்கியுள்ளது.
அஷ்வின் சாதனை:
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அஷ்வின். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், டி-20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளும் அடங்கும். இந்த பட்டியலில் ஏற்கனவே கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களுடன் அஷ்வினும் இணைந்துள்ளார். அதோடு, ஏற்கனவே சிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்திய அஷ்வின், இந்த போட்டியில் ஜுனியர் சந்தர்பால் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம், சர்வதேச போட்டிகளில் தந்தை மற்றும் மகனின் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.