Rohit Virat: ரோகித், விராட்கோலி இல்லாத இந்தியா... வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்னென்ன..? - ஓர் அலசல்..!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இளம் பட்டாளத்துடன் களமிறங்கிய இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டாவது போட்டியில் நேற்று இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ரோகித், விராட் இல்லாத இந்தியா:
நேற்றைய போட்டியில் இந்திய அணி சந்தித்த தோல்வி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பரிசோதனை முயற்சியாக முதல் போட்டியிலே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ரோகித், விராட்கோலி பின்வரிசை வீரர்களாக பேட்டிங்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர். நேற்றைய போட்டியில் ரோகித், விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதலில் பேட் செய்தபோது விக்கெட் இழப்பின்றி 90 ரன்களுடன் இருந்த அணி, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்த 91 ரன்களுக்கு இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன், நான்காவது வீரராக களமிறக்கப்பட்ட அக்ஷர் படேல், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், அனுபவ வீரர் ஜடேஜா என அனைவரும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
டெஸ்ட் போட்டி, ஒருநாள், டி20 என மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் மூன்று வடிவிலான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினால்தான் ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்த முடியும். நேற்று இந்திய அணியில் களமிறங்கிய வீரர்களிலே ஜடேஜா மட்டுமே 100 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவம் கொண்டவர். மற்ற வீரர்கள் மிக குறைந்த ஒருநாள் போட்டி ஆடிய அனுபவம் கொண்டவர்ள். மற்றபடி ஐ.பி.எல். போட்டிகள், டி20 போட்டிகளில் ஆடியவர்கள்.
சொதப்பல் பேட்டிங்:
டெஸ்ட் போட்டியில் ஆடும்போது மிகுந்த நிதானம் தேவைப்படும். டி20 போட்டியில் ஆடும்போது மிகுந்த அதிரடி தேவைப்படும். ஆனால், ஒருநாள் போட்டியில் மட்டும்தான் நிதானமும், அதிரடியும் கலந்த கலவையாக பேட்டிங் செய்ய வேண்டும். அப்போதுதான் ஆட்டத்தை மாற்ற முடியும். நேற்றைய போட்டியில் இஷான் கிஷான் – சுப்மன்கில் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 90 ரன்களை எடுத்து தந்தபோது, அடுத்து வந்த வீரர்கள் அந்த ஸ்கோரை 300 அருகே எளிதாக கொண்டு சென்றிருக்க முடியும்.
ஐ.பி.எல். போட்டிகளில் மட்டையை சுழற்றுவது போல சுழற்றி விக்கெட்டுகளை வீணாக பறிகொடுத்தனர் என்பதுதான் உண்மை. அடுத்து எந்தவொரு இடத்திலும் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் திணறினர். விராட்கோலியும், ரோகித்சர்மாவும் இல்லாததன் பின்னடைவு அப்பட்டமாக அப்படியே நேற்றைய போட்டியில் தெரிந்தது. ரிஷப்பண்ட் நலமாக இருந்தபோது பின்வரிசையில் அணியை தூக்கிப்பிடித்து ஆடிய அனுபவம் அவருக்கு உண்டு. நேற்றைய போட்டியில் அந்த அனுபவம் ஜடேஜா ஒருவருக்கு மட்டுமே இருந்தது. ஆனால், அவரும் 10 ரன்களில் அவுட்டானர்.
ஏமாற்றிய சாம்சன்:
இன்னும் உலகக்கோப்பைக்கு 2 மாதமே இடைவெளி உள்ள நிலையில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் இப்படியொரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. நேற்று களமிறங்கிய வீரர்களில் பாதி பேர் இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் களமிறங்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மற்ற வீரர்கள் எதிர்கால இந்திய அணியாக திகழவும் வாய்ப்புகள் ஏராளம்.
ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து அசத்தும் சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகவே இருந்து வரும் நிலையில், நேற்றைய போட்டியில் ஒன் டவுன் வீரராக களமிறங்கிய அவர் வெறும் 9 ரன்களில் அவுட்டானதும், அதுவும் அவர் ஆட்டமிழந்த விதமும் அனைவரையும் விரக்தியடைய வைத்தது.
கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
இஷான், சுப்மன்கில், ஹர்திக், சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, அக்ஷர், ஷர்துல் என அனைவரும் அதிரடியாக ஆடும் வல்லமை கொண்டவர்கள். ஆனால், ஒருநாள் போட்டியில் அதிரடியும், நிதானமுமே ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டது. 2011ம் ஆண்டு இறுதியாட்டத்தில் இந்திய அணி தொடக்கத்திலே சேவாக், சச்சின் விக்கெட்டை இழந்த பிறகு அதன் பிறகு ஒவ்வொரு விக்கெட்டிற்கும் இந்திய அணி வீரர்கள் நிதானமாகவும், அதிரடியாகவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய ஆட்டமே இந்திய அணியை சாம்பியன் ஆக்கியதே அதற்கு சிறந்த உதாரணம்.
அனுபவமிகுந்த ரோகித், விராட் இருந்தும் அவர்களிடம் இருந்து இதை மற்ற வீரர்கள் இன்னும் கற்கவில்லை என்பது நேற்றைய போட்டியில் அப்பட்டமாக தெரிந்தது. பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் 182 ரன்கள் என்பது ஒரு அணியை எளிதாக வீழ்த்தக்கூடிய இலக்கு அல்ல என்பதே உண்மை. ஆனாலும் தன்னம்பிக்கையுடன் போராடினால் வீழ்த்த முடியும்.
1983ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 183 ரன்களை எட்டவிடாமல், யாருமே நம்ப முடியாத விதத்தில் இந்திய அணி சுருட்டி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிடும்போது இன்றைய வெஸ்ட் இண்டீஸ் அணி மிக பலம் குன்றிய அணியே. ஆனாலும், இலக்கு குறைவு என்பதாலே இந்திய வீரர்கள் தோல்வியை முதலிலேயே ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும் கூறலாம்.
எதிர்கால இந்திய அணி என்பதால் அதிரடியாக ஆடுவது மட்டுமே இலக்கு என்று இல்லாமல், பொறுப்புணர்ந்து நிதானத்துடனும், விவேகத்துடனும் ஆட வேண்டியது இந்திய அணி வீரர்களின் கடமை என்பதை உணர வேண்டும். 50 ஓவர் வடிவிலான ஒருநாள் போட்டிகளில் ஆட்டத்தை எப்போதும் மாற்றும் வல்லமை பேட்ஸ்மேன்களுக்கும் உண்டு, பந்துவீச்சாளர்களுக்கும் உண்டு. ரோகித் சர்மா, விராட்கோலி தங்கள் கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் அவர்கள் இல்லாவிட்டாலும், அதை எவ்வாறு சமாளித்து அந்த குறை தெரியாமல் ஆடுவது என்பதை உணர்ந்து வேகத்துடனும், விவேகத்துடனும் ஆடினால் மட்டுமே இந்திய அணி எப்போதும் வெற்றிகரமான அணியாக உலா வர முடியும்.