(Source: ECI/ABP News/ABP Majha)
IND Vs SL, 3rd ODI: ஆண்டின் கடைசி ஒருநாள் போட்டி - இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்யுமா இந்திய அணி?
IND Vs SL, 3rd ODI: இந்திய கிரிக்கெட் அணி நடப்பாண்டில் தனது கடைசி ஒருநாள் போட்டியில், இன்று இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
IND Vs SL, 3rd ODI: இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி, தொடரை சமன் செய்யுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய - இலங்கை ஒருநாள் தொடர்:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் தலைமையில் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது. அதைதொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்தபோது, யாருமே எதிர்பாராத விதமாக போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சில் அசத்தி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா Vs இலங்கை - 3வது ஒருநாள் போட்டி:
இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், சோனி லைவ் ஒடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இலங்கை அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், நடப்பாண்டில் இந்திய அணி விளையாடப் போகும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகும். எனவே, இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்வதோடு, ஒருநாள் கிரிக்கெட்டை நடப்பாண்டில் வெற்றியுடன் முடிக்க ரோகித் தலைமயிலான அணி முனைப்பு காட்டுகிறது.
இந்திய அணியின் பலம், பலவீனங்கள்:
முதல் இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசி, வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார். ஆனால், அவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்க தவறினர். அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. கோலி, கில், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இந்திய அணியால் இன்று வெற்றி வாகை சூட முடியும். பந்துவீச்சில் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 170 முறை மோதியுள்ளன. அதில், இந்தியா 99 போட்டிகளிலும், இலங்கை 58 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 12 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
கொழும்பு பிரேமதாசா மைதானம் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், நேரம் செல்ல செல்ல பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகின்றனர். இதனால், சேஸிங் செய்வது இந்த மைதானத்தில் கடினமான செயலாக உள்ளது. இதனை முதல் போட்டியிலேயே காண முடிந்தது. எனவே டாஸ் வெல்லும் அணி, முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். கடந்த இரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியே ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
உத்தேச அணிகள் விவரம்:
இந்தியா: ரோகித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா
இலங்கை: சரித் அசலங்க (கே), அவிஷ்க பெர்னாண்டோ, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அகில தனஞ்சய, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க