IND vs SL, 2nd Test: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் அக்சர் படேல் சேர்ப்பு..! குல்தீப் யாதவ் நீக்கம்..!
இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அக்ஷர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. டி20 தொடரை இழந்த இலங்கை அணி மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்தது. இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12-ந் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்க உள்ளது. இந்த போட்டியில் கடந்த டெஸ்டில் ஆடிய அணியே களமிறங்க வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் இடம்பெற்றிருந்த ஜெயந்த் யாதவிற்கு பதிலாக அக்ஷர் படேல் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷர் படேலும் களமிறக்கப்பட்டால் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய ஆல்ரவுண்டர்களுடன் உள்ள இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
அக்ஷர் படேல் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் அட்டகாசமாக தொடங்கியவர். இவர் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடி 36 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 70 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அணிக்கு இக்கட்டான நேரத்தில் பேட்டிங் மூலமும் பங்களிப்பு ஆற்றக்கூடிய அக்ஷர் படேல் டெஸ்டில் ஒரு அரைசதம் கூட அடித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா கடந்த போட்டியில் 175 ரன்கள் அடித்து பவுலிங்கிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு பக்கபலமாக அஸ்வின் பந்துவீசினார். அக்ஷர் படேலும் அடுத்த போட்டியில் களமிறங்கினால், இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் இலங்கைக்கு கடும் நெருக்கடி அளிக்க இயலும்.
கொரோனா பாதிப்பு, காயம் உள்ளிட்ட காரணங்களால் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த அக்ஷர் படேல் தற்போது முழு உடல்தகுதி பெற்றதால் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Watch Video : சின்ன சின்ன அன்பில்தானே.. காத்திருந்த மாற்றுத்திறனாளி.. ஜெர்ஸியை கிஃப்ட் கொடுத்த கோலி! நெகிழ்ச்சி வீடியோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்