Nandre Burger Profile: அறிமுக டெஸ்டில் முக்கிய விக்கெட்டை தூக்கிய நாந்த்ரே பெர்கர்! யார் இவர்? ஐபிஎல்லில் இந்த டீமா?
நேற்றைய போட்டியின் தொடக்க நாளில் இந்திய அணிக்காக பிரசித் கிருஷ்ணாவும், தென்னாப்பிரிக்கா அணிக்காக நாந்த்ரே பெர்கர் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் அறிமுகமாகினர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2 டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட்ஸ் பார்கில் இவ்விரு அணிகளும் நேருக்குநேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
நேற்றைய போட்டியின் தொடக்க நாளில் இந்திய அணிக்காக பிரசித் கிருஷ்ணாவும், தென்னாப்பிரிக்கா அணிக்காக நாந்த்ரே பெர்கர் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் அறிமுகமாகினர்.
வேகப்பந்து வீச்சாளர் நாந்த்ரே பெர்கர் தனது முதல் டெஸ்டிலேயே இந்திய அணியின் முதுகெலும்பை உடைத்தார். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லை பெர்கர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அவுட்டாக்கி அசத்தினார். மேலும், நாந்த்ரே பெர்கரின் பந்துவீச்சுக்கு முன்னால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறவும் செய்கின்றனர்.
டெஸ்டில் தனது அசாத்திய பந்துவீச்சுக்கு முன்பே முத்திரை பதித்த நாந்த்ரே பெர்கர் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? நாந்த்ரே பெர்கரின் வாழ்க்கை இதுவரை எப்படி இருந்தது என்பதை இங்கு பார்க்கலாம்..
யார் இந்த நாந்த்ரே பெர்கர்?
நாந்த்ரே பெர்கர் 11 ஆகஸ்ட் 1995 அன்று க்ரூகர்ஸ்டோர்ப்பில் பிறந்தார். இந்த வீரர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கிலும் இன்னிங்ஸையை மாற்றும் திறன் கொண்டவர். சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 லட்சத்துக்கு நாந்த்ரே பெர்கரை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, கேப் டவுன் பிளிட்ஸ், நெல்சன் மண்டேலா பே ஜெயண்ட்ஸ், கேப் கோப்ராஸ், தென்னாப்பிரிக்கா-ஏ, தென்னாப்பிரிக்கா மேற்கு மாகாணம், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் யாழ் கிங்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
அறிமுகம் எப்போது..?
நாந்த்ரே பெர்கர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சர்வதேச அளவில் அறிமுகமானார். பெர்கர் இதுவரை 1 டி20 போட்டியில் 1 விக்கெட் எடுத்துள்ளார். இது தவிர 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களை எடுத்துள்ளார்.
December has been a dream month for South African youngster Nandre Burger🔥 pic.twitter.com/aEGjZYQVj3
— CricTracker (@Cricketracker) December 26, 2023
நேற்றைய போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான பெர்கர், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தி அனைவரது கவனத்தை தன் பக்கம் திரும்ப செய்துள்ளார்.
முதல் நாளில் இந்திய அணியின் நிலைமை என்ன?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முதல் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியின் முதல் நாளிலேயே, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணி மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் முடிவில் மழையால் ஆட்டம் தடைபட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்க முடியாமல் போனது. இந்தியா தரப்பில் கே.எல்.ராகுல் 70, முகமது சிராஜ் 0 என்ற நிலையில் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர அறிமுக வீரர் நாந்த்ரே பெர்கர் 2 விக்கெட்டுகளையும் மார்கோ யான்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பெரிய விக்கெட்டுகளை ரபாடா கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.