KL Rahul: கேப்டன் போல பேட்டிங் செய்த கே.எல்.ராகுல்! இந்தியாவிற்காக சதம் அடித்து அசத்தல்!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி அபார சதம் விளாசினார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. டி20 தொடர் சமநிலையில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
சதம் விளாசிய கே.எல்.ராகுல்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சுரியனில் தொடங்கியது. செஞ்சுரியனில் நடந்த இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச, முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67.4 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் விளாசி 101 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவின் முதல் இன்னிங்சில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்பிய கேப்டன் ரோகித்சர்மா 5 ரன்களுக்கும், நட்சத்திர வீரர் விராட் கோலி 38 ரன்களுக்கும் அவுட்டாக இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் 17 ரன்னுக்கும், சுப்மன்கில் 2 ரன்னுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், டெயிலண்டர்களை வைத்துக் கொண்டு இந்திய அணிக்காக தனி ஆளாக போராடினார் கே.எல்.ராகுல்.
விமர்சனங்களுக்கு பதிலடி:
காயம் காரணமாக அணியில் இருந்து நீண்ட காலம் ஒதுங்கியே இருந்த கே.எல்.ராகுல் நேரடியாக கடந்த ஆசியக்கோப்பை மூலமாக அணிக்கு திரும்பினார். அவர் அணிக்கு திரும்பியதும் முதல் போட்டியில் பலமிகுந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடினார். எந்த ஒரு உள்ளூர் போட்டியிலும் ஆடாமல் நேரடியாக அணிக்கு களமிறங்கிய அவர் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், அந்த போட்டியில் அவர் சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலகக்கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்திய அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு ஆடிய பேட்டிங் மூலம் பதிலடி தந்தார். தொடக்க வீரர், மிடில் ஆர்டர் என எந்த பேட்டிங் வரிசையிலும் சிறப்பாக ஆடக்கூடிய கே.எல்.ராகுல் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவே ஆகும்.
கேப்டன் போல இன்னிங்ஸ்:
இந்த போட்டியில் அவர் சதம் அடிக்காவிட்டால் இந்திய அணி 180 ரன்களை கடந்திருக்குமா? என்பது சந்தேகமே ஆகும். 5வது விக்கெட்டிற்கு களம் புகுந்து கடைசி 5 வீரர்களை வைத்துக்கொண்டு சதம் விளாசிய ராகுல் கடைசி விக்கெட்டாகவே வெளியேறினார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஏற்கனவே அந்த மண்ணில் கேப்டனாக டெஸ்ட் போட்டி ஆடிய அனுபவம் கொண்ட கே.எல்.ராகுலுக்கு அந்த அனுபவம் இன்று சதம் விளாச உதவியது என்றும் கூறலாம். ரோகித்சர்மாவிற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தும் திறமை கொண்டவராக கருதப்படும் கே.எல்.ராகுல் தற்போது அந்நிய மண்ணில் கடினமான பிட்ச்சில் சதம் விளாசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
ஒரு கடினமான மைதானத்தில் கடினமான சூழலில் ரபாடா போன்ற அனுபவமிகுந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு, கேப்டன் போல ஆடி அணிக்கு பக்கபலமாக நின்ற கே.எல்.ராகுல் அடுத்த இன்னிங்சிலும் பேட்டிங்கில் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மேலும் படிக்க: Actor Suriya: டி10 கிரிக்கெட்டில் சென்னை அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா; ரசிகர்கள் மகிழ்ச்சி
மேலும் படிக்க: Kagiso Rabada: சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை அதிகமுறை வீழ்த்திய புகழுக்கு சொந்தக்காரர் ரபாடா: முழு விபரம்