IND vs SA Final T20 2024: மிரட்டிய விராட் - அக்சார்.. 177 ரன்களை விரட்டுமா தென்னாப்பிரிக்கா அணி..?
IND vs SA Final Innings Highlights: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இறுதிப் போட்டி:
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள பார்படாஸில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் இந்த எதிர்பார்ப்பை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பொய்யாக்கினார். அதாவது 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் விளாசி 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தொடங்கினார்.
ரோஹித் ஷர்மாவின் இடத்தை இவர் தன்னுடைய பேட்டிங் மூலம் நிரப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். 23 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட் கோலி. அப்போது சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அரைசதம் விளாசிய விராட் கோலி:
KOHLI, STANDING FOR INDIA IN FINAL. 🫡 pic.twitter.com/eu2iRxmo8i
— Johns. (@CricCrazyJohns) June 29, 2024
பின்னர் வந்த அக்ஸர் படேல் விராட் கோலியுடன் ஜோடி அமைத்து பார்ட்னர்ஷிப்பை அருமையாக அமைத்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு மளமளவென ரன்கள் உயர்ந்தது. அப்போது அக்ஸர் படேல் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அதாவது 31 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 47 ரன்களை குவித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி 49 பந்துகளில் தன்னுடைய 38 வது டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.மொத்தம் 59 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 76 ரன்களை விளாசினார்.
AXAR PATEL SHOW WITH BAT. 👌 pic.twitter.com/6GyYpV1VQU
— Johns. (@CricCrazyJohns) June 29, 2024
பின்னர் வந்த ஷிவம் துபே 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 27 ரன்களை குவித்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 5 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாட உள்ளது.