IND vs SA, 5th T20 Preview: தொடரை வெல்லப்போவது யார்..? இன்னும் சற்று நேரத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை..!
IND vs SA, 5th T20 : தொடரை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் பெங்களூர் மைதானத்தில் இன்று மோதுகின்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தொடரை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
முதல் இரு போட்டிகளில் தோற்று, அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி மிகுந்த உற்சாகத்துடன் உள்ளது. அதே உற்சாகத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி கைப்பற்றும் முதல் டி20 தொடராக இந்த தொடர் அமையும்.
தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்ததாலும், கடந்த போட்டியில் மிகவும் மோசமாக ஆடி தோற்றதாலும் நிச்சயம் மீண்டும் வர முயற்சிக்கும். அந்த அணியினர் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்பதால் அவர்களும் முழு முனைப்புடன் ஆடுவார்கள். இதனால், சின்னசாமி மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் இந்த ஆட்டத்திலும் தனது அதிரடியை தொடருவார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த போட்டியில் சொதப்பிய ருதுராஜ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். தொடர்ந்து சொதப்பி வரும் முக்கிய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் தனது இழந்தை பார்மை மீட்க வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் ரிஷப்பண்ட் பொறுப்புடன் ஆடினால் நிச்சயம் இந்திய அணி கூடுதல் ஸ்கோரை எட்டலாம்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இன்றும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். இந்தியாவின் ஆபத்பாந்தவனாக உருவெடுத்துள்ள தினேஷ்கார்த்திக் இன்றைய போட்டியிலும் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பந்துவீச்சில் கடந்த போட்டியில் கலக்கிய ஆவேஷ்கான், சாஹல் இந்த போட்டியிலும் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கடந்த போட்டியில் கட்டுக்கோப்பாக வீசிய ஹர்ஷல் படேல், புவனேஷ்குமார் இன்றும் அசத்துவார்கள் என்று நம்பலாம்.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் தெம்பா பவுமா சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். டி காக் அதிரடியாக ஆடினால் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும். அதிரடி வீரர்கள் ப்ரெட்டோரியஸ் , வான்டர் டுசென் ஆகியோரும் பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
டேவிட்மில்லர், கிளெசன் சிறப்பாக பேட்டிங் செய்தால் அந்த அணிக்கு பக்கபலமாக அமையும். பந்துவீச்சில் ரபாடா, லுங்கி நிகிடி, நோர்ட்ஜே, பர்னெல், மகாராஜ் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தொடரை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்