IND vs SA 3rd T20: சொதப்பல் பேட்டிங்..! தினேஷ்கார்த்திக், ரிஷப், தீபக்சாஹர் ஆறுதல்..! தென்னாப்பிரிக்கா வெற்றி..
IND vs SA 3rd T20 Match Highlights: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் இந்தியா 228 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோகித்சர்மா ரபாடா பந்தில் 0 ரன்களில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் வந்த வேகத்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரிஷப்பண்டுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடி காட்டினார். குறிப்பாக, தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரிஷப்பண்ட் 14 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்களுடன் இருந்தபோது அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு தினேஷ் கார்த்திக் ரன் எடுக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார்.
South Africa win the third & final T20I of the series.
— BCCI (@BCCI) October 4, 2022
But it's #TeamIndia who clinch the series 2⃣-1⃣. 👏 👏
Scorecard ➡️ https://t.co/dpI1gl5uwA#INDvSA pic.twitter.com/S5GTIqFAPQ
பவுண்டரிகள், சிக்ஸர்களாக விளாசிய தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 86 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்ததால் தென்னாப்பிரிக்க அணி உற்சாகம் அடைந்தது.
அடுத்து இந்திய வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா, 120 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி கட்டத்தில் தீபக் சாஹர் அதிரடி காட்டினார். அவருக்கு உமேஷ் யாதவ் ஒத்துழைப்பு அளித்தார். ஆல்ரவுண்டர் சாஹர் கடைசி கட்டத்தில் காட்டிய அதிரடியால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. 120 ரன்களில் ஜோடி சேர்ந்த தீபக்சாஹர் – உமேஷ்யாதவ் ஜோடி 168 ரன்களில் பிரிந்தது.
தீபக் சாஹர் 17 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 31 ரன்கள் விளாசி அவுட்டானார். கடைசி கட்டத்தில் உமேஷ் யாதவும் ஓரளவு ரன்களை எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப்பண்ட் தவிர முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் டெயிலண்டர்கள் ஆட்டத்தால் இந்தியா 178 ரன்களை எட்டியது.