IND vs SA: ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்! இந்திய- தெ.ஆப்பிரிக்க டெஸ்ட்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்!
இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது, கடந்த டெஸ்ட் போல பேட்டிங்கில் அசத்தலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.
சரிந்த விக்கெட்டுகள்:
ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க அணியையும் முகமது சிராஜ் தனது வேகத்தில் நிலைகுலைய வைத்தார். இதனால், தென்னாப்பிரிக்க அணி வெறும் 55 ரன்களுக்கு முதல் இன்னிங்சி்ல் ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, ரோகித், சுப்மன்கில், கோலி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.153 ரன்களுக்கு 5வது விக்கெட்டை இழந்த இந்திய அணி மேற்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆல் அவுட்டானது.
இரண்டு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி இன்றே தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினர். தென்னாப்பிரிக்க அணிக்கு 2வது இன்னிங்சும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. கேப்டன் டீன் எல்கர் 12 ரன்களில் அவுட்டாக, ஒரு நாள் தொடரில் மிரட்டிய டோனி 1 ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது,
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்:
போட்டியின் முதல் நாளான இன்று மொத்தம் 23 விக்கெட்டுகள் விழுந்துள்ளது. இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததுடன் தெ.ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சிலும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இந்த 23 விக்கெட்டுகளையும் இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். டெஸ்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 1888ம் ஆண்டு லார்ட்ஸில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான போட்டியில் 27 விக்கெட்டுகள் வீழ்ந்ததே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்துவீச்சாளர்கள் இரண்டு அணியிலும் பந்துவீசவே இல்லை. இந்திய அணியில் ஜடேஜா இருந்தும் அவர் பந்துவீசவில்லை. மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் தாக்கம் நன்றாக எடுபடுவதால், நாளையும் விக்கெட்டுகள் மழை விழும் என்று எதிர்பார்க்கலாம். தென்னாப்பிரிக்க அணி மோசமாக பேட் செய்து வருகிறது. 36 ரன்கள் பின்தங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியை வெல்ல வேண்டுமென்றால் அபாரமான இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
போட்டி முடிய இன்னும் 4 நாட்கள் உள்ளதால் இந்த போட்டிக்கு நிச்சயம் முடிவு கிட்ட உள்ளது. நாளையே வெற்றி பெறப்போவது யார்? என்பது தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.