IND vs SA 1st Test: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி... இந்திய பந்து வீச்சாளர்களை தாக்கி பேசிய ஜாகிர் கான்!
சர்துல் தாகூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இந்திய பவுலர்கள் மோசமாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் ஜாகிர் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தோல்வி அடைந்த இந்திய அணி:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது.
இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது. ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.
இதில், முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி மிக மோசமாக விளையாடியது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் 245 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 131 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதோடு இந்த டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வியை பெற்றது இந்திய அணி. முன்னதாக, தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக, இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் மட்டும் தான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல், பந்து வீச்சை பொறுத்த வரை ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தான் சிறப்பாக செயல்பட்டனர். அதேநேரம் பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் மோசமாகவே செயல்பட்டனர்.
மோசமான பந்து வீச்சு:
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுக்க திண்டாடிய அதே பிச்சில் தென்னாப்பிரிக்கா 408 ரன்கள் குவிக்கும் அளவுக்கு சர்துல் தாகூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இந்திய பவுலர்கள் மோசமாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் ஜாகிர் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”தென்னாப்பிரிக்க சூழ்நிலைகளில் சரியான லென்த்தை தெரிந்து கொள்வது முக்கியமாகும். மேலும் விக்கெட்கள் எடுக்கலாமா அல்லது பேட்ஸ்மேன்களை அமைதியாக வைத்திருக்க வேண்டுமா என்பதில் தெளிவு வேண்டும். இப்போட்டியில் சர்துல் தாகூர் மற்றும் பிரசித் சரியான லென்த்தை கண்டறிய தவறினார்கள்.
குறிப்பாக உணவு இடைவெளிக்கு பின் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிறைய ஷாட்களை தூக்கி அடித்து எளிதாக ரன்கள் குவித்தனர்.
அது போன்ற சமயங்களில் இந்தியா பிளான் பி வைத்திருந்திருக்க வேண்டும். அல்லது ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தி எதிரணி ரன் குவிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா அடித்த ரன்களை தென் ஆப்பிரிக்கா கண்டிப்பாக தாண்டது என்பது போல் பிட்ச் இருந்தது. எனவே இந்திய பவுலர்கள் அமர்ந்து என்ன தவறு செய்தோம் என்பதை யோசிக்க வேண்டும்” என்று கூறினார்.