Rohit Sharma: தொடக்க வீரராக 300வது சர்வதேச போட்டி.. ரெக்கார்டில் கெத்து காட்டும் ரோஹித் சர்மா..!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதன் மூலம் ரோஹித் சர்மா தனது 300வது சர்வதேச போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார்.
ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொழும்பு ஆர்.கே. பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் ரோஹித் சர்மா தனது 300வது சர்வதேச போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார்.
இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் ஆகியோருக்கு பிறகு, இந்த சாதனையை படைத்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை ரோஹித் படைத்தார். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அதிக போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்சமாக 346 போட்டிகளில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். அதேநேரத்தில், வீரேந்திர சேவாக் 321 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர்:
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையில் 664 போட்டிகளில் விளையாடி அதில், 346 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். இதில், 48.07 என்ற சிறந்த சராசரியுடன் 15, 335 ரன்களுடன் 45 சதங்களும், 75 அரை சதங்களும் உள்ளன. இதில் ஒரு இரட்டை சதமும் இவரது பெயரில் உள்ளது.
வீரேந்திர சேவாக்:
வீரேந்திர சேவாக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 374 போட்டிகளில் 321 இன்னிங்ஸ்கள் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார். அதில், 41.90 சராசரியுடன் 15,758 ரன்களுடன் 36 சதங்களும், 65 அரைசதங்களும் அடித்துள்ளார்.
இன்று இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இதுவரை 299 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 46.69 சராசரியுடன் 13,356 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 36 சதங்களும், 66 அரை சதங்களும் அடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களையும் ரோகித் சர்மா தொடக்க வீரராகவே களமிறங்கி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான் நான்காவது இடத்தில் உள்ளார். தவான் 268 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2023 ஆசிய கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி மழையால் நிறைவடையாமல் போனது. இதைத் தொடர்ந்து இந்தியா நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதன் பின்னர், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டி செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் கொழும்பில் நடைபெறும்.
இந்தியா - பாகிஸ்தான்:
தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - கில் களமிறங்கி சிறப்பாக விளையாடி 12 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளனர்.