India vs Pakistan: பாகிஸ்தான்னு சொன்னாலே எங்களுக்கு பாயாசம் சாப்புடற மாதிரிதான்.. முன்னிலையில் ரோகித்- விராட்; என்னனு தெரியுமா?
India vs Pakistan: இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது.
Asia Cup 2023: இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது.
இம்முறை ஆசிய கோப்பைத் தொடரில், தொடரை நடத்தும் அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா, வங்காள தேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் நேபாளம் அணி முதல் முறையாக ஆசிய கோப்பைத் தொடரில் களம் காண்கிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடரில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது, இந்தியா பாகிஸ்தான் மோதல் தான்.
இந்தியாவும் பாகிஸ்தானும் சிறப்பாக குரூப் சுற்று தொடங்கி சூப்பர் 4 போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதமுடியும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தொடரில் களமிறங்கியுள்ள மற்ற 6 அணிகளில் 5 அணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ள உலகக்கோப்பை போட்டியிலும் மோத உள்ளதால் ஒவ்வொரு அணியும் மற்ற அணியை வீழ்த்த பல்வேறு யுக்திகளைக் கையாளும்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் காயமடைந்த வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால், இந்திய அணி தனது முழு பலத்தையும் சோதனை செய்து கொள்ள இந்த தொடர் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை, பவுலிங் வரிசை என அனைத்தும் பேப்பரில் மிகவும் வலுவாக இருப்பதைப் போன்று காணப்பட்டாலும், களத்தில் எப்படி இருக்கும் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் தான் தெரியவரும்.
இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களாக திகழும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நாளை நடைபெற உள்ள போட்டியின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடிவரும் வீரர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்திலும் விராட் கோலி அடுத்த இடத்திலும் உள்ளனர்.
ரோகித் சர்மா 720 ரன்களுடனும் விராட் கோலி 536 ரன்களுடனும் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா இரண்டு சதங்களும் ரோகித சர்மா 16 அரை சதங்களும், விராட் கோலி 2 அரைசதங்களும் விளாசியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஷிகர் தவான் 380 ரன்களுடனும் ஹர்திக் பாண்டியா 122 ரன்களுடனும் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். அவர், 2 ஆயிரத்து 526 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதம் 16 அரைசதங்கள் அடங்கும்.