IND vs NZ, 3rd ODI: வீணான கான்வே சதம்..நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா...! மீண்டும் மிரட்டல் வெற்றி..!
IND vs NZ, 3rd ODI: நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோகித்சர்மா – சுப்மன்கில் அபார சதம் விளாசினார். அடுத்த வந்த வீரர்கள் சீராக ரன்கள் சேர்த்தாலும், ஹர்திக் பாண்ட்யா பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசியதாலும் இந்திய அணி 385 ரன்களை குவித்தது.
மிரட்டிய பவுலிங்:
இதையடுத்து, 386 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்துக்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஆலன் இந்த போட்டியிலும் சொதப்பினார். அவர் ஹர்திக் பாண்ட்யா பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து கான்வே – நிகோலஸ் ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர்.
இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட அவர்கள் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களை சேர்த்தனர். இதையடுத்து, அணியின் ஸ்கோர் 106 ரன்களை எட்டியபோது நிகோலஸ் 42 ரன்களில் குல்தீப் சுழலில் சிக்கி அவுட்டானார். அடுத்து கான்வேவுடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். மிட்செல் சிறிது நேரம் கான்வேவுக்கு ஒத்துழைப்பு அளித்தார். அவர் தாக்கூர் பந்தில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
வீணான கான்வே சதம்:
அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் கேப்டன் டாம் லாதம் தான் சந்தித்த முதல் பந்திலே விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி வீரர் பிலிப்சும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் கான்வே நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார்.
சிறப்பாக ஆடிய அவர் உம்ரான் மாலிக்கின் வேகத்தில் ஆட்டமிழந்தார். அவர் 100 பந்துகளில் 12 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் விளாசி 138 ரன்களில் வெளியேறினார். அவருக்கு பிறகு ப்ராஸ்வேல் 26 ரன்களிலும், சான்ட்னர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தார். கடைசியில் நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒயிட்வாஷ்:
இந்திய அணியில் குல்தீப், ஷர்துல் தாக்கூர் தலா 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டையும், பாண்ட்யா, உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாக வென்று அசத்தியுள்ளது.
நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தோற்றதால் அந்த அணி வீரர்களும், ரசிகர்களும் சோகம் அடைந்தனர்.