IND vs NZ 1st Test: விக்கெட் கீப்பிங்கில் கலக்கும் கே.எஸ். பரத் அட! நம்ம சஹா எங்கப்பா..?
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் மூன்றாவது நாள் தொடக்கம் முதலே இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார் சப்டிடியூட் கே.எஸ். பரத்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி ஸ்ரேயாஸ் சதம், சுப்மன்கில் மற்றும் ஜடேஜா அரைசதங்கள் உதவியுடன் 345 ரன்களை குவித்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்திருந்தது.
இந்த நிலையில், ஆட்டத்தின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நியூசிலாந்திற்கு எதிராக அஸ்வின் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ரஹானே தொடர்ந்து அஸ்வினுக்கே ஓவர்களை வாரி வழங்கினார். அவரது நம்பிக்கைக்கு பலன் கிடைத்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை இழந்தது.
இந்திய அணிக்கு குடைச்சல் அளித்து வந்த வில் யங், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 151 ஆக உயர்ந்தபோது 214 பந்தில் 15 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்திருந்த வில்யங் விருத்திமான் சஹாவிற்கு பதில் கீப்பிங் செய்த ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, விளையாடி வரும் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இன்றைய மூன்றாவது நாள் தொடக்கம் முதலே விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு பதிலாக சப்டிடியூட் கே.எஸ். பரத் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். கே.எஸ். பரத் எதற்கு விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதல் அனைவருக்கும் கேள்வி எழுந்தது. இது குறித்த கேள்வியையும் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கேள்வியாக எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில், இதற்கு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ளது. அதில், சஹாவிற்கு கழுத்தில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது கழுத்தை வலது மற்றும் இடது புறம் திருப்பமுடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக விருத்திமான் சஹாவிற்கு பதிலாக சப்டிடியூட் கே.எஸ். பரத் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPDATE - Wriddhiman Saha has stiffness in his neck. The BCCI medical team is treating him and monitoring his progress. KS Bharat will be keeping wickets in his absence.#INDvNZ @Paytm
— BCCI (@BCCI) November 27, 2021
இதற்கு முன்னதாக ரிஷப் பண்ட்க்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக விருத்திமான் சஹா விக்கெட் கீப்பிங்கிற்கு ஆப்சனாக இருந்தார். அவருக்கும் தற்போது காயம் பட்டிருந்த காரணத்தினால் தற்போது கே.எஸ். பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விருத்திமான் சஹா முதல் இன்னிங்ஸில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எஸ்.பரத் கடந்த ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி அசத்தியவர் என்பதும், முதல் தர போட்டியில் 9 சதங்கள் உள்பட 4283 ரன்கள் எடுத்துள்ளார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்