Shreyas Iyer Test Century: ஸ்ரேயாஸ் அய்யர் அசத்தல் சதம்....! சவுதி சிறப்பான பந்துவீச்சு..! 339 ரன்களுடன் ஆடி வரும் இந்தியா
கான்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் தனது அறிமுகப்போட்டியிலே சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்தியாவும், நியூசிலாந்தும் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல்நாளானே நேற்று இந்திய அணி 258 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்தது.
இந்த நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜடேஜா மேற்கொண்டு 12 பந்துகள் மட்டுமே பேட் செய்த நிலையில் ரன்கள் ஏதும் எடுக்காமல் டிம்சவுதி பந்தில் போல்டாகினர். அவர் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில், இந்த போட்டி மூலம் டெஸ்டில் அறிமுகமான ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதலாவது சதத்தை அடித்தார். நெருக்கடியான நேரத்தில் இந்திய அணிக்காக அவர் அடித்த சதம் மூலம் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. ஆனால், மறுமுனையில் 1 ரன்களே எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் சஹா ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் சவுதி பந்தில் சதமடித்த ஸ்ரேயாஸ் அய்யரும் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அக்ஷர் படேல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தற்போது இந்திய அணி உணவு இடைவேளை வரை 109 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களுடன் ஆடி வருகிறது. அஸ்வின் 5 பவுண்டரிகள் உள்பட 38 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். டிம் சவுதி தற்போது வரை சிறப்பாக பந்துவீசி 27.4 ஓவர்களில் 69 ரன்களே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளர். இன்று மட்டுமே சவுதி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நெருக்கடியான நேரத்தில் இந்திய அணிக்காக சதமடித்த ஸ்ரேயாஸ் அய்யருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவருக்கு ஒத்துழைப்பு கிட்டினால் இந்திய அணி 400 ரன்களை எளிதாக கடக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்