(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ 1st Test: இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் - வெற்றி தொடருமா? பெங்களூரு வானிலை என்ன?
IND vs NZ 1st Test: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
IND vs NZ 1st Test: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. அதே உற்சாகத்தில் இந்த தொடரிலும் களமிறங்க உள்ளது. அதேநேரம், கடந்த சில மாதங்களாகவே நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அண்மையில் கூட இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து அதிர்ச்சியளித்தது. இந்த சூழலில் நடைபெறும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பெங்களூரு டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் தொடரின் முதல் டெஸ் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சி அலைவரிசையில் ஸ்போர்ட்ஸ்18 நெட்வர்க்கிலும், ஜியோ சினிமா ஒடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற, இந்திய அணிக்கு இன்னும் 3 வெற்றிகள் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால், இந்த தொடரை முற்றிலுமாக கைப்பற்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி ஆர்வம் காட்டுகிறது. இதனால், இந்த தொடருக்கான சுவாரஸ்யத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பலம், பலவீனங்கள்:
ரோகித் சர்மா தலைமயிலான இந்தியா அணி, அனுபவம் வாய்ந்த மற்றும் திறன் வாய்ந்த இளம் வீரர்கள் என சரியான கலவையில் அமைந்துள்ளது. உள்ளூர் மைதானங்களில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது, எதிரணிகளுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை. ஜெய்ஷ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, அஷ்வின், ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரை சமாளிப்பது நியூசிலாந்து அணிக்கு கடும் சவலாக இருக்கும். அதேநேரம், வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் கோலி, இந்த தொடரில் அசத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காயம் காரணமாக கில் இன்றய போட்டியில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள நியூசிலாந்து அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முன்னைப்பு காட்டுகிறது. ஆனால், காயம் காரணமாக முன்னாள் கேப்டன் வில்லியம்சன், முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் தொடரிலிருந்தே விலகி இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
நேருக்கு நேர்:
இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 62 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 22 முறையும், நியூசிலாந்து 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 27 போட்டிகள் டிராவில் முடிந்தன.
மைதானம் எப்படி?
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக அறியப்படுகிறது. இந்த மைதானத்தில் இந்தியா கடைசியாக 2022 இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து இந்தியா 500+ ரன்களை எடுத்ததால் ஒருதலைப்பட்சமான ஆட்டமாக இருந்தது, ஆனால் இலங்கை அணி ரன்களை சேர்க்க தடுமாறியது குறிப்பிடத்தக்கது.
வானிலை நிலவரம்:
அக்டோபர் 16: மழைக்கு 41% வாய்ப்பு
அக்டோபர் 17: மழைக்கு 40% வாய்ப்பு
அக்டோபர் 18: மழைக்கான வாய்ப்பு 67%
அக்டோபர் 19: மழைக்கு 25% வாய்ப்பு
அக்டோபர் 20: மழைக்கு 40% வாய்ப்பு
மைதானத்தின் வடிகால் அமைப்பு சிறப்பாக இருந்தாலும், முதல் போட்டி நடைபெறுவது என்பது வருண பகவான் கைகளிலலேயே உள்ளது. நகரின் வானிலை நிலவரப்படி, மழையால் போட்டி கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனகூறப்படுகிறது.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (சி), ஷர்ப்ராஸ் கான், விராட் கோலி, ரிஷப் பண்ட் (வி.கே.) , கே.எல். ராகுல் , ஜடேஜா , ரவிச்சந்திரன் அஷ்வின், பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்
நியூசிலாந்து: டாம் லாதம் (சி), டெவோன் கான்வே, டபிள்யூஏ யங், ரச்சின் ரவீந்திரா, டிஜே மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, எம்ஜே ஹென்றி, ஏய் படேல்