(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ 1st T20: ஆறுதல் அளித்த வாஷிங்டன் சுந்தர்.. பவுலிங்கில் மிரட்டிய நியூசி..! இந்தியா பரிதாப தோல்வி..!
IND vs NZ 1st T20: நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20-யில் பரிதாபமாக தோல்வியை தழுவியது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கான்வே மற்றும் மிட்செல்லின் அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 176 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன்கில் – இஷான் கிஷான் ஆட்டத்தை தொடங்கினர். இந்திய அணி 10 ரன்களை எட்டியபோது தொடக்க வீரர் இஷான்கிஷான் 4 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அடுத்து வந்த ராகுல் திரிபாதி டக் அவுட்டாகினார். ஒருநாள் போட்டியில் அசத்திய சுப்மன்கில் 7 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்திய அணி 15 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. அப்போது, கேப்டன் ஹர்திக் – சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினார். மைதானத்தில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால், இவர்களால் துரிதமாக ரன்களை சேர்க்க முடியவில்லை.
இருப்பினும், சூர்யகுமார் யாதவ் சற்று அதிரடியாக ஆடினார். அவர் 34 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் சோதி பந்தில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தரும் – தீபக் ஹூடாவும் ஜோடி சேர்ந்தனர். தீபக் ஹூடா 10 பந்துகளில் 1 சிக்ஸருடன் 10 ரன்களில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த ஷிவம் மாவி 2 ரன்களுக்கும், குல்தீப்யாதவ் டக் அவுட்டாகியும் வெளியேறினர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் இந்திய வீரர்களுக்கு ஆறுதலாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். கடைசி கட்டத்தில் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய வாஷிங்டன் சுந்தர் தனது முதல் அரைசதத்தை விளாசி அசத்தினார். கடைசியில் அவர் பெர்குசன் பந்தில் 28 பந்தில் 50 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியில் ப்ராஸ்வெல், கேப்டன் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், சோதி, டஃபி தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக, நியூசிலாந்து அணி தடுமாறியபோது கான்வே 52 ரன்களும், மிட்செல் 59 ரன்களும் விளாசி அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நியூசிலாந்து அணி இந்த தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி பந்துவீசியபோது கடைசி ஓவரில் மட்டும் அர்ஷ்தீப்சிங் 27 ரன்களை வாரி வழங்கினார். மேலும், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதுடன் கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தருடன் அதிரடியாக ஆடுவதற்கு வீரர்கள் இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் கூறலாம்.
மேலும் படிக்க:Washington Sundar Catch: மின்னல் வேகத்தில் பறந்து கேட்ச்.. அந்தரத்தில் அசத்திய வாஷிங்டன் சுந்தர்..! வைரலாகும் வீடியோ..!
மேலும் படிக்க: IND vs NZ Womens U19 WC: உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி: நியூசிலாந்தை வீழ்த்தி அபாரம்..!