IND vs ENG Match Highlights: ஷமி - பும்ரா வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கிய இங்கிலாந்து; 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி
IND vs ENG Match Highlights: 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது.
உலககக் கோப்பைத் தொடரினை ஐசிசியுடன் இணைந்து நடத்தும் இந்தியா, நடப்பு உலகக் கோப்பை சாம்பியனாக உள்ள இங்கிலாந்து அணிகள் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் செல்லும். ஆனால், இங்கிலாந்து அணி தோல்வியைச் சந்தித்தால் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதற்கான 90 சதவீதத்தினை உறுதி செய்யும் எனும் நிலையில் களமிறங்கியது.
இப்படியான நிலையில் இரு அணிகளும் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி இதற்கு முன்னர் விளையாடிய 5 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ரோகித் சர்மாவிற்கு கேப்டனாக 100 ஒருநாள் போட்டி என்பது கூடுதல் சிறப்பு. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாக இந்த போட்டி பாராட்டைப் பெற்றது.
அதன் பின்னர் 230 ரன்களை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் 4 ஓவர்கள் சிறப்பாக அமைந்தது. இதேபோல் இங்கிலாந்து பேட்டிங் செய்தால் இங்கிலாந்து 35 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி விடும் என இங்கிலாந்து ரசிகர்கள் யோசித்திருக்க கூடும். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் தொடக்கவீரர் மலான் மற்றும் மூன்றாவது வீரராக களமிறங்கிய ரூட்டின் விக்கெட்டினை வீழ்த்தினார். இதில் ரூட் தான் எதிர் கொண்ட முதல் பந்திலேயே தனது விக்கெட்டினை இழந்தார்.
இதையடுத்து இரட்டை குழல் துப்பாக்கிபோல் முகமது ஷமியும் பும்ராவைப் போல் அடுத்தடுத்த பந்துகளில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தொடக்க வீரர் பேரிஸ்டோவ் விக்கெட்டினை வீழ்த்தினார். இதில் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அதன் பின்னர் வந்த பட்லர் குல்தீப் யாதவ் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதேபோல் மிகவும் நிதானமாகவே விளையாடிக்கொண்டு இருந்த மொயின் அலி விக்கெட்டினை முகமது ஷமி கைப்பற்ற போட்டி 60 சதவீதம் இந்தியாவின் கரங்களுக்கு வந்தது.
ஒரு கட்டத்தில் லிவிங்ஸ்டன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் கூட்டணி மிகவும் பொறுமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் கிறிஸ் வோக்ஸ் ஜடேஜா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் தனது விக்கெட்டினை ஜடேஜா வீசிய 29வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்து விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் மூலம் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அடுத்து 30வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் ஓவரில் லிவிங்ஸ்டன் தனது விக்கெட்டினை எல்.பி.டபள்யூ முறையில் இழந்து வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை அள்ளினார். அதேபோல் புமாரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.