Bumrah: SENA நாடுகளை நடுங்க வைத்த சேனாதிபதி! புதிய வரலாறு படைத்த பும்ரா
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றை பும்ரா படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 471 ரன்களை எடுத்த நிலையில், முதல் இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. இ்ங்கிலாந்து அணி இழந்த ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட் ஆகிய 3 பேரையும் பும்ரா அவுட்டாக்கினார்.
பும்ரா புதிய வரலாறு:
உலகளவில் இன்று 3 வடிவங்களிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்து வரும் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக பும்ரா உள்ளார். நேற்றைய போட்டியில் அவர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது, சேனா எனப்படும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அவர்களது மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றை பும்ரா படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்த சாதனையை வாசிம் அக்ரம் தன்வசம் வைத்திருந்தார். பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் வீரரான வாசிம் அக்ரம் இந்த அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 146 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நேற்றைய போட்டியில் பென் டக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பும்ரா இந்த சாதனையை படைத்தார்.
148 விக்கெட்டுகள்:
பும்ரா இந்த அணிகளுக்கு எதிராக 60 இன்னிங்சில் 148 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் பும்ரா, வாசிம் அக்ரமிற்கு அடுத்தபடியாக அனில் கும்ப்ளே 141 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 130 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
பும்ரா இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 208 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பும்ரா மட்டுமே அசத்தல்:
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹெடிங்லேவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வீசியும் பும்ரா மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ராவிற்கு பக்கபலமாக இவர்களும் விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே இந்த போட்டியை இந்தியா தன்வசம் கொண்டு வர முடியும்.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் தூணாக பும்ரா உள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் ஆடி 149 விக்கெட்டுகளையும், 70 டி20 போட்டிகளில் ஆடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணிக்காக கேப்டன்சி பொறுப்பை பும்ரா ஏற்றார். அவரது தலைமையில் இந்திய அணி ஒரு நல்ல ஏற்றத்தை கண்ட நிலையில், கேப்டன்சி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு சுப்மன்கில்லிடம் ஒப்படைக்கப்பட்டது.




















