IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி வீரர்கள் பல சாதனைகளை புதிய படைத்துள்ளனர்.

IND VS ENG T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அபிஷேக் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
இந்திய அணி அபார வெற்றி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி, நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெறும் 132 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பட்லர், 44 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக அபிஷேக் சர்மா, இங்கிலாந்தின் பந்துவீசை நாலாபுறமும் சிதறடித்தார். 34 பந்துகளில் 79 ரன்களை குவித்தார். இதன் மூலம், 12.5 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரிலும், 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதனால், 14 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி, இந்தியாவில் டி20 தொடரை வென்றதில்லை என்ற சாதனையை தொடரும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
அர்ஷீப் சிங் சாதனை:
இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதன்படி, அர்ஷ்தீப் மொத்தமாக இதுவரை 97 விக்கெட்டுகளை வீழ்த்தி, யுஸ்வேந்திர சாஹலின் 96 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்தார். அர்ஷ்தீப் இந்தியாவுக்கான தனது 61வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அதோடு, உலகில் டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் ஒருவராக அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், தனது 53வது டி20 போட்டியில் 100வது விக்கெட்டை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
டி20-யில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள்:
1. அர்ஷ்தீப் சிங் - 61 டி20 போட்டிகளில் 97
2. யுஸ்வேந்திர சாஹல் - 80 டி20 போட்டிகளில் 96
3. புவனேஷ்வர் குமார் - 87 டி20 போட்டிகளில் 90
4. ஜஸ்பிரித் பும்ரா - 71 டி20 போட்டிகளில் 89
கே. எல். ராகுலின் சாதனை முறியடிப்பு
34 பந்துகளில் 79 ரன்களை குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு அபிஷேக் சர்மா முக்கிய பங்களித்தார். அதேநேரம், வெறும் 20 பந்துகளில் அரைசதம் கடந்து, இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இந்தியரின் இரண்டாவது அதிவேக அரைசதம் என்ற KL ராகுலின் சாதனையை முறியடித்தார். முன்னதாக கே.எல். ராகுல் கடந்த 2018ம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரன டி20 போட்டியில், 27 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

