IND vs ENG 5th Test: இந்திய அணிக்கு மீண்டும் கேப்டன் ஆகிறாரா விராட்கோலி..? மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
ரோகித் சர்மாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி மீண்டும் செயல்படுவாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்தாண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். லீசெஸ்டர்ஷையர் அணியுடன் இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது.
ரோகித்திற்கு கொரோனா :
இந்த சூழலில், இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணி நிர்வாகமும், இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித்சர்மா, ஹோட்டலில் உள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்திய அணியை வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கே.எல்.ராகுல் காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா துணைகேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், ரோகித்சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அணியை பும்ரா வழிநடத்துவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தகேப்டன் யார்..?
அதேசமயத்தில், இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் கடந்தாண்டு வழிநடத்தியவரும், இந்திய அணியின் அனுபவமிகுந்த கேப்டனுமாக வலம் வந்தவருமான விராட்கோலி மீண்டும் இந்திய அணியை வழிநடத்துவாரா? என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது அணியில் உள்ள சீனியர் வீரர் விராட்கோலி மட்டுமே ஆவார்.
அதேநேரத்தில், தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப்பண்டிடம் கேப்டன்ஷிப் ஒப்படைக்கப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. அணியின் எதிர்காலம் கருதி, அடுத்த கேப்டனை உருவாக்கும் நோக்கத்தில் இளம் வீரரான ரிஷப்பண்டிடம் கேப்டன்ஷிப் ஒப்படைக்கப்படுவமா? என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
ரோகித்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ரிஷப்பண்ட், பும்ரா இருவரில் யாரிடம் கேப்டன்ஷிப்பை ஒப்படைக்கலாம் என்ற கேள்வி எழுந்தாலும், விராட்கோலி கேப்டனாக வழிநடத்துவதையே அணி நிர்வாகம் விரும்பும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால், பலமிகுந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள நல்ல அனுபவமுள்ள கேப்டனே தேவை என்றே அணிநிர்வாகம் விரும்புகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்