சிராஜ், பிரசித் பயங்கரம்.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி பெற ஒரு சான்ஸ்..!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்திற்கு வலுவான இலக்கை நிர்ணயிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி கருண் நாயர் அரைசதத்தின் உதவியால் 224 ரன்களை எடுத்தது.
கிராவ்லி - டக்கெட் அதிரடி:
இதையடுத்து, முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் இருவரும் அதிரடியாக ஆடினர். பவுண்டரி, சிக்ஸர் என இருவரும் விளாசினர். ஒருநாள் போட்டி போல இருவரும் ஆடியதால் ரன் விறுவிறுவென ஏறியது. அபாரமாக ஆடிய டக்கெட் ஆகாஷ் தீப் பந்தில் அவுட்டானார். அவர் 38 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அவர் ஆட்டமிழந்த பிறகும் அதிரடி காட்டிய கிராவ்லி அரைசதம் விளாசினார். அரைசதத்திற்கு பிறகும் அதிரடியைத் தொடர முயன்றி கிராவ்லியை பிரசித் கிருஷ்ணா அவுட்டாக்கினார். அவரது பந்தில் அவர் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 57 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 64 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.
பவுலிங்கில் மிரட்டிய சிராஜ் - பிரசித் கிருஷ்ணா:
போட்டி நடந்து கொண்டிருந்தபோது அவ்வப்போது மழை பெய்தது. இதனால், பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த மைதானம் மொத்தமாக பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. 129 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து அடுத்து மொத்தமாக சரிந்தது.
அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் போப் - ஜோ ரூட் இருவரும் நிதானமாக ஆடினார்கள். ஆனால், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ்தீப் ஆகிய 3 பேரும் பந்துவீச்சில் அசத்தினர். நிதானமாக ஆடிய கேப்டன் போப் சிராஜ் பந்தில் எல்பிடபுள்யூ ஆனார். அவர் 22 ரன்களுக்கு அவு்ட்டாக, ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர்.

ஹாரி ப்ரூக் நிலைத்து நிற்க ஜோ ரூட் சற்று தடுமாறினார். அவர் முகமது சிராஜ் பந்தில் எல்பிடபுள்யூ ஆனார். அவர் 45 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல் 6 ரன்களில் அவுட்டாக, அபாயகரமான பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் 8 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டாக ஹாரி ப்ரூக் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினார்.
அவர் கடைசியாக சிராஜ் பந்தில் 53 ரன்களில் போல்டானார். வோக்ஸ் காயம் காரணமாக களமிறங்காததால் இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஜெய்ஸ்வால் அரைசதம்:
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் - ராகுல் ஆட்டத்தை தொடங்கினர். கே.எல்.ராகுல் நிதானமாக ஆட முயற்சித்தாலும் அவர் 7 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டி போல ஆடினார். அவருக்கு சாய் சுதர்சன் சில நிமிடங்கள் ஒத்துழைப்பு தந்தார். அவர் 29 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி முடியும் நேரத்தில் அவுட்டானார். இதனால், நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறங்கினார்.
சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார். அவர் 49 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆகாஷ் தீப் 4 ரன்களுடன் உள்ளார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. 75 ரன்களுடன் 2 விக்கெட் இழப்பிற்கு ஆடி வரும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மிகப்பெரிய ரன்களை குவித்து இங்கிலாந்திற்கு வலுவான இலக்கை நிர்ணயிக்க வேண்டியது அவசியம்.
வெற்றி பெறுமா இந்தியா?
ஏனென்றால், போட்டி முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளதால் வலுவான இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே இந்தியா வீழ்த்த முடியும். ஏனென்றால், மைதானம் பேட்டிங்கிற்கே சாதகமாக இருக்கும் சூழலில் மழை பெய்தால் மட்டுமே பந்துவீச்சிற்கு சாதகமாக அமைகிறது. இதனால், இந்திய அணியின் எஞ்சிய வீரர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.




















