IND vs ENG 2nd Test: எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்படி? கரைசேருமா இந்தியா? பர்மிங்காம் சொல்லும் வரலாறு இதுதான்!
IND vs ENG 2nd Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் நடக்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்படிப்பட்டது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

IND vs ENG 2nd Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஃபீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவினார்.
எட்ஜ்பாஸ்டன்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானம் உலகின் பழமையான மைதானங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மைதானம் 1882ம் ஆண்டு திறக்கப்பட்டது.
மைதானம் எப்படி?
இந்த மைதானத்தில் இதுவரை 60 டெஸ்ட் பாேட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அணி இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2வது பேட்டிங் செய்த அணி 23 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சின் சராசரி 302 ரன்கள் ஆகும். 2வது இன்னிங்சின் சராசரி 315 ரன்கள் ஆகும். 3வது இன்னிங்சின் சராசரி எட்ஜ்பாஸ்டனில் 243 ரன்கள் ஆகும். 4வது இன்னிங்சின் சராசரி 157 ரன்கள் ஆகும்.
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 2011ம் ஆண்டு 710 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் ஆகும். குறைந்தபட்சமாக இங்கிலாந்திற்கு எதிராக தென்னாப்பிரிக்கா 30 ரன்களில் சுருண்டதே இந்த மைதானத்தில் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
இந்தியாவிற்கு எப்படி?
1967ம் ஆண்டு முதல் இந்திய அணி இந்த மைதானத்தில் ஆடி வருகிறது. இந்த மைதானம் இந்திய அணிக்கு மிகவும் மோசமான வரலாறாகவே அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட வெற்றி பெற்றதே இல்லை. 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 1 போட்டியில் டிரா செய்துள்ளது. இந்திய அணிக்காக இந்த மைதானத்தில் இதுவரை சச்சின், விராட் கோலி, ரிஷப்பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 4 பேர் மட்டுமே சதம் விளாசியுள்ளனர்.
இங்கிலாந்துக்கு குஷியோ.. குஷி:
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இந்த மைதானத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 920 ரன்கள் விளாசியுள்ளார். 3 சதம் மற்றும் 5 அரைசதங்கள் இந்த மைதானத்தில் அவர் விளாசியுள்ளார். 3 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார். இங்கிலாந்து வீரர் அல்லாமல் வெளிநாட்டு வீரர் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தன்வசம் வைத்துள்ளார். அவர் 2 டெஸ்ட் போட்டியில் 523 ரன்கள் விளாசியுள்ளார்.
இந்த மைதானத்தில் தனி நபர் அதிகபட்சமாக 2011ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக குக் 294 ரன்கள் விளாசியதே அதிகம். இந்த மைதானத்தில் மோசமான தோல்வி அடைந்த அணி சாதனை இந்தியா வசமே உள்ளது. இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. ஆண்டர்சன் இந்த மைதானத்தில் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு இந்த மைதானம் சிறப்பு வாய்ந்த மைதானமாகவே உள்ளது. சொந்த மைதானம், பந்துவீச்சு மட்டுமே அவர்களுக்கு பலவீனமாக இருந்த நிலையில் தற்போது ஆர்ச்சரும் களத்திற்கு திரும்பியிருப்பது அவர்களை மேலும் பலப்படுத்தியுள்ளது.
தவறை சரி செய்யுமா இந்தியா?
மிகவும் சவால் மிகுந்த இந்த மைதானத்தில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இதனால், இந்திய அணியின் பந்துவீச்சு படை என்ன செய்யப்போகிறது? என்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஃபீல்டிங் அமைந்தது. மேலும், டெயிலண்டர்கள் பேட்டிங்கில் பெரியளவு பங்களிப்பை வழங்காததும் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், அடுத்த டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியில் செய்த தவறை இந்திய அணி இந்த போட்டியிலும் செய்யாவிட்டால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி சவால் அளிக்கலாம்.
முதல் டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய ஜெய்ஸ்வால், சுப்மன்கில், கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் இந்த டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். முதல் டெஸ்டில் சொதப்பிய சாய் சுதர்சன், கருண் நாயர் இந்த டெஸ்டில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.




















