IND vs ENG 1st T2O: முதல் டி20! இங்கிலாந்தை பொளக்குமா இந்தியா? சூர்யா படையை சுளுக்கு எடுப்பார்களா பட்லர் பாய்ஸ்?
IND vs ENG 2025: இந்தியா இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND vs ENG 1st T20: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி ஆடும் முதல் தொடர் இதுவாகும்.
இன்று முதல் டி20:
இந்த தொடர் டி20 தொடராக இருந்தாலும் டெஸ்ட் தொடர்களில் கிடைத்த தொடர் தோல்வியில் உள்ள இந்திய அணிக்கு இந்த தொடரில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும். இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடி வருகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்குசிங், நிதிஷ் ரெட்டி போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களுடன் ஐ.பி.எல். அனுபவம் நிரம்ப கொண்ட சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவும் உள்ளனர்.
கம்பேக் தந்த ஷமி:
ஆல்ரவுண்டர்களாக இந்திய அணிக்கு பலமாக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் உள்ளனர். இவர்களுடன் பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங் உள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு முகமது ஷமி இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். அவரது பந்துவீச்சு இந்திய அணி நிர்வாகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
பட்லர் பாய்ஸ்:
இங்கிலாந்து அணியும் மிகவும் பலமாக உள்ளது. கேப்டன் பட்லர் தலைமையில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் பலருக்கும் ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவம் இருப்பதால் அவர்கள் இந்திய அணிக்கு சவால் அளிக்க வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் பலமாக பில் சால்ட், பட்லர், டக்கெட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் உள்ளனர். பந்துவீச்சில் அட்கின்ஸன், ஓவர்டன், கார்ஸ், ஆர்ச்சர், அடில் ரஷீத் உள்ளனர்.
இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளனர். இரு அணிக்கும் சவாலாக இருப்பது ஆடும் லெவனைத் தேர்வு செய்வதிலே இருக்கும். சொந்த மண்ணில் ஆடும் இந்திய அணி இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்கவே முனைப்பு காட்டும். ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

