IND VS ENG 1ST TEST:கும்ப்ளே - ஹர்பஜன் ஜோடியின் சாதனையை முறியடித்த அஸ்வின் - ஜடேஜா ஜோடி! அப்படி என்ன சாதனை?
டெஸ்ட் போட்டிகளில் ஜோடியாக விளையாடி இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்த வீரர்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா.
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினார்கள்.
இதில், 40 பந்துகள் களத்தில் நின்ற ஜாக் கிராவ்லி 20 ரன்களிலும் பென் டக்கெட் 35 ரன்களிலும் அஸ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் களத்திற்கு வந்த ஒல்லி போப் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஜடேஜாவின் மாயஜால சூழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக 55 ரன்களில் இருந்து 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி.
பின்னர் கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜானி பார்ஸ்டோ இருவரும் ஜோடி சேர்ந்தனர். அப்போது 121 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்திருந்த சூழலில் ஜடேஜாவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் ஜானி பார்ஸ்டோ. அதேபோல், டாம் ஹெர்த்லி விக்கெட்டையும் ஜடேஜா தான் வீழ்த்தினார்.
60 ஓவர்கள் முடிவின் படி 220 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது. தற்போதையை நிலவரப்படி, ரவீந்திர ஜடேஜா 17.2 ஓவர்கள் வீசி 4 ஓவர்களை மெய்டன் செய்து 81 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், ரவிச்சந்திரன் அஸ்வின் 19 ஓவர்கள் வீசி 1 ஓவர் மெய்டன் செய்து 60 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
புதிய சாதனை படைத்த அஸ்வின் - ஜடேஜா ஜோடி:
The Greatest spin duo in Test cricket.
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024
- Ashwin & Jadeja. 🐐👑 pic.twitter.com/fU5ZdVYT3B
இந்நிலையில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து விளையாடி இந்திய அணிக்காக இதுவரை 503 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக, அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்து விளையாடி இந்திய அணிக்காக சுமார் 501 விக்கெட்டுகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். அதேபோல், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் இணைந்து 474 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அதன்படி, ஒரு ஜோடி வீரர்களை இணைந்து இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளனர்.
மேலும் படிக்க: IND vs ENG: சுழல் தாக்குதல் நடத்தும் இந்தியா! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இங்கிலாந்து!
மேலும் படிக்க: IND vs ENG 1st TEST: தொடங்கியது டெஸ்ட்! டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்! சுழல் தாக்குதல் நடத்துமா இந்தியா?