Most Test Wickets:ஜடேஜா 300 - டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்தியர்கள் யார்?
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அனில் கும்ப்ளே. தற்போது இந்த பட்டியலில் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அனில் கும்ப்ளே. தற்போது இந்த பட்டியலில் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 யில் விளையாடுகிறது. இதில், கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து கான்பூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களகாக தொடர் மழையால் போட்டி நடைபெறவில்லை.
நேற்று (செப்டம்பர் 30) முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் சேர்த்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த நிலையில் இந்திய அணி சார்பில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் யார் என்பதை இங்கே பார்ப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அனில் கும்ப்ளே. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 236 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். இதில், 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 193 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். இதில், 526 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 93 விக்கெட்டுகள் தேவை. வரும் ஆண்டுகளில் அடுத்தடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் இந்த சாதனையை அஸ்வின் முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவருமான கபில் தேவ் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் 227 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள கபில் தேவ் 434 விக்கெட்டுகளை வீழ்தி இருக்கிறார்.
ஹர்பஜன் சிங் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்திய அணிக்காக மொத்தம் 190 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஜாகீர் கான் 165 இன்னிங்ஸ்கள் விளையாடி 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.ஆறாவது இடத்தில் இஷாந்த் சர்மா உள்ளார். மொத்தம் 188 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இச்சூழலில் தான் தற்போது ரவீந்திர ஜடேஜா இதில் இணைந்துள்ளார். அந்தவகையில் மொத்தம் 139 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள அவர் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி ஏழாவது இடத்தில் இணைந்துள்ளார். எட்டாவது இடத்தில் இருப்பவர் பிஷன் சிங் பேடி. 118 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள இவர் 266 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.