IND vs BAN 1st Test: சுப்மன்கில், புஜாரா அதிரடி சதம்..! வங்காளதேசத்திற்கு 513 ரன்கள் இலக்கு..!
இந்திய அணியின் முக்கிய நட்சத்திரம் புஜாரா மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக சதமடித்து விளாசியுள்ளார்.
வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் சட்டோகிராம் நகரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்களையும், வங்காளதேசம் 150 ரன்களையும் குவிக்க இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது.
இந்திய தொடக்க வீரர் சுப்மன்கில் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்புடனும், அதிரடியாக ஆடி வந்த அபார சதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு புஜாரா தன்னுடைய சதத்தை விளாசினார். 129 பந்துகளில் புஜாரா இந்த சதத்தை விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா விளாசும் 19வது சதம் இதுவாகும்.
இந்திய அணி 2வது இன்னிங்சில் 258 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 512 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் வங்காளதேசத்திற்கு 513 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அணி வங்காளதேசத்தை முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருட்டியது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்காளதேசத்திற்கு நெருக்கடி அளித்தார். இதையடுத்து, 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் பேட்டிங்கை கேப்டன் கே.எல்.ராகுல் – சுப்மன்கில் தொடங்கினர். ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வரும் கே.எல்.ராகுல் இந்த இன்னிங்சில் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினார்.
அவர் ஓரிரு ரன்களாக எடுத்து வந்த நிலையில், சுப்மன்கில் இயல்பாக ரன்களை சேர்த்தார். கே.எல்.ராகுல் 23 ரன்கள் எடுத்திருந்தபோது 3 பவுண்டரிகள் விளாசிய நிலையில் கலீத் அகமது பந்தில் அவுட்டானார். அடுத்து புஜாரா – சுப்மன்கில் ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து மிகவும் நிதானமாகவும் ஏதுவான பந்துகளை மட்டுமே விளாசினார். தொடக்கத்தில் மிகவும் நிதானமாக ரன்களை சேர்த்த புஜாரா அதிரடிக்கு மாறினார்.
அபாரமாக ஆடிய சுப்மன்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை விளாசினார். அவர் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாரா அதிரடிக்கு மாறினார். அவர் 130 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 19 சதம் இதுவாகும். புஜாரா சதம் விளாசியதும் இந்தியா டிக்ளேர் செய்தது. 258 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தது.
புஜாரா 102 ரன்களுடனும், விராட்கோலி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 513 ரன்கள் இலக்குடன் களமிறங்கி ஆடி வந்த வங்காளதேசம் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. ஷாண்டோ 25 ரன்களுடனும், ஜாகீர் ஹாசன் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆட்டம் முடிய இன்னும் 2 நாள்கள் இருப்பதாலும், வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 471 ரன்கள் தேவைப்படுவதாலும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் இந்தியா அபாரமாக பந்துவீசினால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எளிதாக வசப்படும்.