IND vs AUS: பார்டர்-டிராபியின் வரலாறு... இதுவரை ஆதிக்கம் செலுத்தியது இந்தியாதான்.. முழு ரிப்போர்ட் இதோ!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் போட்டியின் வரலாறு என்ன என்பதை கீழே காணலாம்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள ஜம்தாவில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 9 முதல் 13 வரை முதல் டெஸ்ட் போட்டியும், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17 முதல் 21 வரை 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 1 முதல் 5 வரையிலும், நான்காவது டெஸ்ட் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9 முதல் 13 வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் வீரர்களும் நாக்பூர் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் போட்டியின் வரலாறு என்ன என்பதை கீழே காணலாம்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் தொடரானது 75 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடப்பட்டாலும், பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கீழ் டெஸ்ட் தொடர் 26 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது. கடந்த 1996 அக்டோபர் மாதம் முதல்தான் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடருக்கு பார்டர்-கவாஸ்கர் டிராபி என்று பெயரிடப்பட்டது. அன்றிலிருந்து இப்போது வரை இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கீழ் நடத்தப்படுகின்றன.
கடந்த 1996 அக்டோபரில் பார்டர்-கவாஸ்கர் டிராபி முதல்முறையாக விளையாடப்பட்டபோது, அதன் கீழ் ஒரே ஒரு டெஸ்ட் மட்டுமே விளையாடப்பட்டது. பின்னர் இந்திய சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியா அணி இங்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்படி ஒரு தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை இந்தியா மட்டுமே இந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கடந்த 26 ஆண்டுகளில், பார்டர்-கவாஸ்கர் டிராபி 15 முறை நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா 9 முறையும், ஆஸ்திரேலியா அணி 5 முறை மட்டுமே வென்றுள்ளது. ஒருமுறை டிரா ஆகியுள்ளது. இந்த 15 தொடர்களில் மொத்தம் 52 போட்டிகள் நடைபெற்று, அதில் இந்தியா 22 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 19 போட்டிகளிலும் வென்றுள்ளது. அதேபோல், 11 போட்டிகள் டிரா நடந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் ஒருமுறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்பு:
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 1947 நவம்பர் முதல் 1992 ஜனவரி வரை அதாவது சுமார் 45 ஆண்டுகளில் 12 டெஸ்ட் தொடர்கள் விளையாடப்பட்டன. இந்த 12 தொடரில், 7 தொடர்கள் ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணி ஒரு முறை மட்டுமே தொடரை வென்றுள்ளது. நான்கு முறை டிரா ஆனது. இந்த 12 தொடர்களில் நடைபெற்ற 50 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 24 வெற்றிகளையும், இந்தியா 8 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இதன் போது 17 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.
இனிவரும் போட்டிகள் 4 அல்ல 5:
முன்னதாக வருங்கால பார்டர்- கவாஸ்கர் டிராபி குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “இந்த தொடர் முடிந்ததும் 2023-27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்களின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின் (FTP) படி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டு ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்களை பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக விளையாடும் என்றும், இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023-25 வரையிலான சுழற்சி முறையில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும். அதன்பிறகு, 2025-27 வரையிலான சுழற்சி முறையில் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கின்றன.
இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் 4 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி பதிப்பாக இதுவே இருக்கும். இதன்பிறகு நடைபெற இருக்கும் அனைத்து போட்டிகளுக்கும் இதுக்கு பிறகு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகவும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், 2003/04 முதல் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்ததிலிருந்து 4 போட்டியாகவே இருந்து வருகிறது. கடந்த 2010/11 ம் ஆண்டு மட்டுமே பார்டர்-கவாஸ்கர் தொடரானது 2 போட்டிகளாக நடத்தப்பட்டது. டைசியாக 1991/92 சீசனில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.