IND vs AUS Final 2023: 2 முறை... ஆஸ்திரேலியா கப் ஜெயிச்சதுக்கு இது காரணமோ? அப்படின்னா இந்தமுறை இந்தியாதான் சாம்பியன்!
IND vs AUS Final 2023: இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ‘பி’ அணிகளுக்கு எதிராக விளையாடுவது போல் அட்டகாசமாக ரன்களை குவித்தனர்.
உலகக் கோப்பை 2023ன் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
அசத்திய இந்திய அணி:
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே சிறப்பாகவே செயல்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றது. அதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, ரன் மெஷின் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என ஒவ்வொரு அணியையும் வீழ்த்தி வீறுநடை போட்டது. தொடர்ந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளையும் ஓடவிட்டது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ‘பி’ அணிகளுக்கு எதிராக விளையாடுவது போல் அட்டகாசமாக ரன்களை குவித்தனர். இந்த உலகக் கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஏழு பேட்ஸ்மேன்களில் மூன்று இந்திய வீரர்கள் உள்ளனர். அந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 711 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து, ரோஹித் சர்மா 550 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 526 ரன்களும் எடுத்துள்ளனர்.
மேலும், உலகக் கோப்பை 2023ல் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் சேர்த்து 2810 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளது. அதேபோல், மற்ற அணிகளையும் விட அதிகபட்ச சராசரி (58.54), அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் (104.65), அதிக ஐம்பது-பிளஸ் ஸ்கோர் (23) மற்றும் இரண்டாவது அதிக பவுண்டரிகளையும் (354) அடித்துள்ளது.
அதிக விக்கெட்கள்:
பேட்ஸ்மேன்கள் ஒரு பக்கம் ரன் மழை பொழிந்தாலும், மறுபக்கத்தில் பவுலர்கள் விக்கெட் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முகமது ஷமி மற்றும் பும்ரா உள்ளனர். முகமது ஷமி 23 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா 18 விக்கெட்களையும் வீழ்த்தி எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய பந்துவீச்சாளர்கள் மொத்தம் 95 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர், இதில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டும் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக, அதிக மெய்டன்கள் (23), சிறந்த சராசரி (20.90), சிறந்த எகானமி ரேட் (4.72), அதிக ஐந்து விக்கெட்டுகள் (4) மற்றும் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் (7-57) என அனைத்தும் இந்திய அணி பெயரிலேயே பதிவாகியுள்ளது.
தொடருமா விக்கெட் வேட்டை..?
இந்த உலகக் கோப்பையில் இந்திய பந்துவீச்சாளர்கள் இதுவரை 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது நமக்கு தெரிந்ததே. ஒரே பதிப்பில் இரண்டு அணியினர் மட்டுமே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர். அதுவும் இரண்டு முறையும் ஆஸ்திரேலிய அணியே இந்த சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த 2007ல், 97 விக்கெட்களும், 2003ல் 96 விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தியது. தற்செயலாக, அந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தியா தற்போது தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 95 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது. அதனால் ஆஸ்திரேலியா இதேபோன்ற சூழ்நிலையில் கோப்பையை வென்றதுபோல் இந்தியாவும் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
மிடில் ஓவரில் மிரட்டும் ஆடம் ஜம்பா:
இந்த உலகக் கோப்பையில் மிடில் ஓவரில் அதிக விக்கெட்கள் (17) எடுத்தவர் பட்டியலில் ஆடம் ஜம்பா முதலிடத்தில் உள்ளார். இவர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணிக்கு ஆப்புதான். இந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஜம்பா இந்தியாவுக்கு எதிராக 22 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக அவரது எகானமி ரேட் (5.67) நன்றாக உள்ளது.