IND vs AUS Final: 2011-க்கும் 2023-க்கும் இத்தனை ஒற்றுமைகளா..? அப்போ! இந்த வருஷமும் உலகக் கோப்பை நமக்குதான் பிகிலு...!
கடந்த 2011 நடந்த சில நிகழ்வுகள், 2023 உலகக் கோப்பை போட்டிகளுடன் ஒத்து போகின்றன. இவை அனைத்தும் மீண்டும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று சொல்லாமல் சொல்கின்றன.
உலகக் கோப்பை 2023 போட்டியானது கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவின் அடிப்படையில் இறுதிப் போட்டியில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது . இம்முறை இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்த போது, எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்திய அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளதால், இம்முறையும் அந்த அணி உலக சாம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011 உலகக் கோப்பை மற்றும் 2023 உலகக் கோப்பையில் பல விஷயங்கள் நடந்துள்ளன. அதில், கடந்த 2011 நடந்த சில நிகழ்வுகள், 2023 உலகக் கோப்பை போட்டிகளுடன் ஒத்து போகின்றன. இவை அனைத்தும் மீண்டும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று சொல்லாமல் சொல்கின்றன. அவை என்ன மாதிரியான ஒற்றுமைகள் என்பதை கீழே பார்க்கலாம்..
முதல் ஒற்றுமை:
2011 உலகக் கோப்பைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு, இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு நடந்த 2011 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இங்கிலாந்து அணியால் செல்ல முடியவில்லை. இந்த முறையும், 2023 உலகக் கோப்பைக்கு ஒரு வருடம் முன்பு, இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையை வென்றது. ஆனால் 2023 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இங்கிலாந்து அணியால் வர முடியவில்லை.
இரண்டாவது ஒற்றுமை:
2011 உலகக் கோப்பையில், கடைசி குரூப் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நம்பர்-4 இல் பேட்டிங் செய்த யுவராஜ் சிங் சதம் அடித்து, ஆட்ட நாயகன் விருது வென்றார். இதேபோல், 2023 உலகக் கோப்பையிலும், இந்தியா அணி நெதர்லாந்துக்கு எதிரான கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடியது. இதில் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.
மூன்றாவது ஒற்றுமை:
2011 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக இடது கை சுழற்பந்து வீச்சாளர் யுவராஜ் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த முறை 2023 உலகக் கோப்பையிலும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நான்காவது ஒற்றுமை:
2011 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, முனாப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். அதேபோல் 2023 உலகக் கோப்பையில் கூட, இந்திய அணியின் ஐந்து பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை பரிசளித்தனர்.
ஐந்தாவது ஒற்றுமை:
2011 உலகக் கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் அவரது முதல் சதமாகவும் பதிவானது, இந்த முறை 2023 உலகக் கோப்பையிலும், விராட் கோலி வங்காளதேசத்திற்கு எதிராக சதம் அடித்திருந்தார். அந்த போட்டியிலும் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த ஒற்றுமைகளை எல்லாம் பார்க்கும்போது, 2011 மற்றும் 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளிலும் ஒற்றுமை நடக்கும் என்றும், இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.