India vs Australia 4th T20 - Innings Highlights: ரிங்கு சிங்- ஜித்தேஷ் அதிரடி... ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இந்தியா - ஆஸ்திரேலியா:
இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. அதன்படி, இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. இதில், கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதேபோல், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லில் அதிரடியால் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 1) ராய்பூரில் உள்ள ஷாஹித் வீர் நாரயண சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டி20 போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
ரிங்கு- ஜித்தேஸ் அதிரடி:
அதன்படி, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார். அதன்படி, மொத்தம் 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 37 ரன்களை குவித்தார். 5 ஓவர்கள் முடிவதற்குள் இந்திய அணியின் ரன்ரேட் மளமளவென உயர்ந்தது.
மறுபுறம் ருதுராஜ் களத்தில் நிற்க ஸ்ரேயஸ் 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், வந்த சூர்யகுமாரும் விக்கெட்டை பறிகொடுக்க நிதனமாக விளையாடிய ருதுராஜ் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 32 ரன்கள் குவித்தார். அப்போது அவருடன் ஜோடி அமைத்த ரிங்கு சிங் சிறப்பாக விளையாடினார். இதனிடையே இந்த ஜோடியை தன்வீர் சங்க பிரித்தார்.
பின்னர் வந்த ஜித்தேஸ் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அதேபோல், ரிங்கு சிங்கும் அதிரடிகாட்ட இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜித்தேஸ் சர்மா களத்தில் இறங்கிய உடனே 3 சிக்ஸர்களை பறக்க விட்டார். அதன்படி, மொத்தம் 19 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என மொத்தம் 35 ரன்களை குவித்தார்.
இரண்டு ஓவர்களில் 5 விக்கெட்டுகள்:
18.4 ஓவர்கள் முடிவின் போது இந்திய அணி 5 விக்கெட்டுகளுக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி 200 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் களம் இறங்கிய அக்ஸர் படேல் முதல் பந்திலேயே ரன் ஏதும் இன்றி டக் அவுட் முறையில் வெளியேறினார். இப்படி கடைசி இரண்டு ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. தற்போது 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.